உணர்வுகளின் தொகுப்பே கவிதை. பல சமயம் நம் உணர்வுகளை வெறும் வார்த்தையால் வெளிப்படுத்த முயன்று அதில் தோல்வி அடையும்போது கவிதை அதற்குத் துணைவருகின்றது. அதேசமயம் கவிதை நம் உணர்வை அப்படியே வெளிப்படுத்தாமல், அதற்குக் கற்பனை சேர்த்து சுருக்கமாக நம் உணர்வை வெளிப்படுத்த உதவுகின்றது. கவிதை என்ற ஒன்று இல்லாதிருந்தால் மானிடர் வாழ்வு எவ்வளவு வறட்சியாக இருந்திருக்கும்?
தற்கால ’வசன கவிதைகள்’ இலக்கண, இலக்கிய மரபுகளிலிருந்து மாறுபட்டிருந்தாலும் அவை நமக்கு மன உணர்வுகளை வெளிப்படுத்த தரும் எழுத்துச் சுதந்திரம் மிகவும் சிறப்பானது. இதுதான் கவிதை என எல்லை வகுப்பவர் யார்? மன உணர்வுகளும், வார்த்தைகளும் உள்ளவரை கவிதைக்கு எல்லை வகுக்கவோ அல்லது அணைபோடவோ எவராலும் முடியாது. பிறர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஒருவர் கவிதை எழுதுவதில்லை. அது அவரின் ஆன்மாவின் குரல். அதை அவர் தன் ஆன்மீக, மனத்திருப்திக்காகத் தான் எழுதுகிறாரே தவிர பிறர் பாராட்டவேண்டும் எண்ணம் கொண்டு அல்ல. என் கவிதைகளும் (அவை கவிதை என்று ஒப்புக்கொள்ளப்படாவிட்டாலும் கூட) என் ஆன்மாவின் குரல். ஆனால் அக்குரல் சிலரது மன உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாக இருக்குமானால் அதை என்வரையில் பூட்டி வைப்பது முறையல்ல என்பதால் அவற்றை இங்கு தொகுத்துத் தந்துள்ளேன்.
என் பாடல்கள் ஒவ்வொன்றிற்கும் பின்னால் ஒரு சம்பவம் பெரும்பாலும் இருக்கும். அதன் பின்னணியை முடிந்தவரை மறைக்காமல், தெரிந்தவரை எழுதி உள்ளேன். சில பாடல்கள் என் உண்மையான கருத்தை பிரதிபலிக்கவில்லை. அவை வெறும் கற்பனைகள். சில சமயம் கருத்து முரண்பாடு காணப்படும். அதற்கு முக்கிய காரணம் அந்தச் சூழ்நிலையில் மன உணர்வுகளுக்கு வடிகால் கொடுக்க அவை எழுதப்பட்டன. சில கருத்துக்களில் எனக்கே உடன்பாடு இல்லை. ஆனால் அந்தச் சூழ்நிலையில் மனதின் உணர்ச்சிப் பெருக்கை, கற்பனை கலந்து வார்தையாக வெளிப்படுத்தி உள்ளேன்.
உணர்ச்சியும் கவிதையும் இரண்டரக் கலந்தவை. ஆனால் வெறும் உணர்ச்சிகளைக் கொண்டுமட்டுமே கவிதை எழுத முடியாது. உணர்வு, உணர்ச்சி, எண்ணம், அனுபவம் அனைத்தையும் உள்ளடக்கியதே கவிதை. ஆனால் ஆன்மீகப் (பக்திப்) பாடல்கள் உணர்வு, உணர்ச்சி, எண்ணம், அனுபவத்துடன், சித்தாந்தத்தையும் அடிப்படையாகக் கொண்டது. சினிமாவிற்குப் பாடல் எழுதுவது போல் அவற்றை எழுதமுடியாது. குறிப்பாக ஒரு பக்தன் தன் பக்தியை பாடல்கள் மூலம் வெளிப்படுத்தும்போது, அது அவனின் சித்தாந்தத்தை அடித்தளமாகக் கொண்டுதான் அமையும். சில சமயம் அனுபவம் தான் கொண்ட சித்தாந்தத்தை ஒட்டி அமையாவிட்டாலும், அதற்கு முறண்பாடாக அமையாது. பக்தியின் பரவசத்தால் தன் அனுபவத்தை சொல்லமுடியாமல் போகலாம். ஆனால் சொல்லியவை தான் கொண்ட சித்தாந்தத்திற்கு புறம்பாக இருக்காது. எனவே என் பாடல்கள், பலசமயம் பக்தியின் பரவசத்தை அப்படியே வெளிப்படுத்த இயலாவிட்டாலும், அவை என் சிந்தனையின் ஓட்டத்தைமீறி அமைந்ததில்லை. பல சமயம் தியானத்தில் இருக்கும்போது, பிரார்த்தனை செய்யும் போது, உள்ளான பரவசத்தால் தூண்டப்பட்டு, உடன் அந்த அனுபவத்தை, சிந்தனை ஓட்டத்தை பாடலாக எழுதியதுண்டு. பல சமயம் எந்தவித முன்னறிவிப்புமின்றி, சில சொற்கள் என் சிந்தையில் தோன்ற, உடனே அது பாடலாக வடிவெடுத்ததுண்டு. பல சமயங்களில், படித்துக்கொண்டிருக்கும்போது, பயணத்தின் போது, பணிசெய்து கொண்டிருக்கும்போது ஏன் இன்னும் உறக்கத்தில் கூட கனவில் தோன்றும் சில சொற்களும் என் கவிதைகளுக்கு காரணமாக அமைந்துள்ளன. பல சமயம் இரவில் தூக்கம் வராமல் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, அருகிலேயே காகிதமும், பென்சிலும் வைத்துக்கொள்வதுண்டு. இருட்டிலேயே, படுத்தபடியே சிந்தையில் தோன்றும் வார்த்தைகளை இடம் விட்டு பெரியாக எழுதி பின் கவிதையாக முடித்ததுண்டு. பல பாடல்கள் சில நிமிடங்களிலேயே எழுதப்பட்டவை. பல சிறிது சிறிதாக எழுதப்பட்டு பிறகு முடிவு பெற்றவை. அதுபோல் முடிவு பெறாத கவிகைதளும் இருக்கின்றன. ஆனால் என்னால் உள்ளான தூண்டுதல் இன்றி செயற்கையாகக் கவிதை எழுத முடிந்தது இல்லை.
என் ஆன்மீகத் தேடல், இறை நம்பிக்கை, பக்தியின் பரிமாணம் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளவோ, விவாதிக்கவோ இது சரியான இடம் இல்லை என்பது என் எண்ணம். ஏதோ என் ஆன்மீக வாழ்க்கை விவாதத்திற்கு அப்பாற்பட்டதோ அல்லது பகிர்ந்து கொள்ள இயலாத அளவு குறைவானது அல்லது இரகசியமானது என்ற காரணத்தால் அல்ல. அவற்றைப் பற்றிய என் கொள்கை மிகவும் உறுதியாக இருந்தும், அவற்றைப் பகிர்ந்து கொள்ள, அதனால் ஏற்படும் விவாதங்களைச் சரியாக எடுத்துச் செல்ல சொற்கள், சொல்லும் திறன், போன்றவை இன்னும் என்னுள் அமையவில்லை. எனவே அவற்றைத் தற்சமயம் பகிர்ந்துகொள்வது தேவையற்ற முரண்பாடுகளுக்கும், விவாதற்கும் வழிவகுக்குமே தவிர, என் எண்ணங்களைச் சரியாக வெளிப்படுத்துவதாக இருக்காது.
ஆனால் என் பக்தியின் பரிமாணத்தில், அதை வெளிப்படுத்தும் படியாகப் பல பாடல்களை எழுதி உள்ளேன். அவற்றை அப்படியே, எத்தகைய விவாதப்பொருளாக்காமல் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இவை சிலருக்கு அவர்களின் தனிப்பட்ட பக்தி வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக அமையுமானால், அதுவே எனக்கு முழு மன நிறைவைத் தரும். இப்பாடல்களுக்கு நானே இசையும் அமைத்துள்ளேன்.
எல்லா சாமானிய இந்துவைப் போன்றே நானும் இறைவனை தேட முயன்றேன். அத்தேடலுக்கு இன்றி அமையாத ஒரு குருவை மிகவும் முனைப்புடன் தேடினேன். இறுதியில் அத்தேடல் ’முக்தேசனை’ என் குருவாக அடைய வழி வகுத்தது. ஆனால் அக்குருவை பின்பற்றுவதில் ஏற்பட்ட போராட்டங்கள், தேடுவதில் இருந்ததைப்போல் பல மடங்குகள் அதிகமாக இருந்தது. அப்போராட்டங்களை வேரொரு புத்தகத்தில் நான் எடுத்துக் கூறிஉள்ளேன். (Living Water and Indian Bowl, ISPCK, Delhi) ஆனால் புறம்பான போராட்டங்களைக் காட்டிலும் என் மனதில் முக்தேசனை என் முழுமுதற் இறைவனாக, என் ஆசானாக ஏற்றுக் கொள்வதில் ஏற்பட்ட போராட்டம் மிகவும் கடுமையாகவும் அதிகாமாகவும் இருந்தது. அதற்குக் காரணம் அவனை ஒரு மதத்துடன் தொடர்பு படுத்தி அறிவிக்கப்பட்டும், அறியப்பட்டும் இருந்ததே யாகும்
ஆரம்பநிலையில் நானும் வாழ்வின் சில கேள்விகளுக்கான
விடையை எனக்கு வெளியே அறிவின் மூலமும், மறைகளின் மூலமும், மனிதர்கள் மூலமாகவும் அடைய முயன் றேன். அதே சமயம் அவற்றின் துணை மற்றும் அவைகளுடன் நான் கொண்ட போராட்டங்களும் இன்றி நான் முழுமையாக என் குருவை அறிந்திருப்பேன் என்றும் கூறமுடியாது. அதே சமயம் என் பக்தியின் பரிமாணம் அவற்றின் அடிப்படையிலேயே இருக்கவில்லை. அது என் தனிப்பட்ட ஆன்மீகத் தேடலின் தொடக்கமாகவே இருந்தது, இன்றும் இருக்கின்றது.
எனவே என் பாடல்கள் என் பக்தியின் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாக உள்ளது. ஆனால் என்பாடல்களை அவற்றின் சொற்களைக்கொண்டு மட்டுமே புரிந்து கொள்ள முடியாது. அவற்றின் பிண்ணணியில் உள்ள ’சித்தாந்தங்களை’ ஓரளவு விளக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால், நம் முன் வாழ்ந்த பல சமயக்குரவர்களின் பாடல்களை அவற்றின் ’சித்தாந்தங்களை’ சரிவர அறியாமல் அவர்களின் பக்தி நெறியை நாம் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியாது.
ஆனால் நம் சமய வழிபாட்டு நெறியில், நம் பக்திக்கு உதவும் பாடல்கள அனைத்தின் சித்தாந்தக் கருத்துக்களையும் அறிந்தபின் நாம் அவற்றை பயன் படுத்துவது இல்லை. அவை பெரும்பாலும் நம் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும், பக்தியை வளர்க்கத் தேவையான அளவு மட்டுமே பெரும்பாலும் பயன் படுத்துகின்றோம். ஆனால் ஒரு இந்துவாக இருந்து கொண்டு முக்தேசனின் பக்தனாக வாழும் என் வாழ்க்கையில், என் பாடல்களின் பின்னணி மட்டும் அல்லாது, அவற்றின் சித்தாந்தக் கருத்துக்களையும் அறியாது, அவற்றை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. இன்னும் ஒரு படி மேலே போய் சொல்வதென்றால், என்பாடல்களைக் காட்டிலும் அவற்றுக்கு நான் தரும் விளக்கங்களே மிக முக்கியமாக எனக்குப் படுகின்றது. ஏன் என்றால், அவற்றை மற்றவர் புரிந்து கொண்டு அதற்கு அவர்கள தரும் விளக்கங்கள் என் உண்மையான ஆன்மீக பயணத்தை விளக்குவதாக அமையாது. எனவே என் பாடல்களுக்கு நான் முடிந்தவரை என் விளக்கதை அளித்துள்ளேன். சில சமயம் பாடல்களைக் காட்டிலும் விளக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் என் நோக்கம் என் பாடல்களை மட்டுமே பகிர்ந்து கொள்வது அல்ல. அவற்றின் மூலம் என் பக்தியின் பயணத்தை தெளிவு படுத்துவதும் ஆகும்.
எல்லா ஆன்மீகப் பயணங்களைப் போலவும் என் பக்தியின் பயணமும் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அதற்குக் காரணம் என் தனிப்பட்ட மனப்போராட்டங்கள் மட்டும் அல்ல. முக்தேசனை என் குருவாக அடைந்தது, அதை நான் புரிந்து கொண்டது, நான் புரிந்து கொண்டதை பிறருக்குப் புரியவைக்க தவறியது, நான் புரியவைக்க முயன்றும் பிறர் அதை சரியாக புரிந்து கொள்ள முடியாமற் போனது, எல்லாவற்றிற்கும் மேலாக ’சமயம்’ என்ற திரையின் மூலமே அவனைப்பற்றி அறிய, அறிவிக்க முயன்றதும் மிக முக்கியமான காரணமாகும். அவற்றை யெல்லாம் இங்கு விரிவாக எடுத்துச் சொல்ல இடமும் நேரமும் இல்லை. ஆனால் ’முக்திக்கு ஈசன்’ எனக்குத் தந்த உள்ளான விடுதலை ’சமயம்’ சாராமல் ’மனிதம்’ மற்றும் ’மனம்’ சார்ந்து உள்ளதால், ’சமயத் திரையை’ நீக்கி இவற்றைப் புரிந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன்.
முக்தேசனின் பக்தனாக ஆன ஆரம்ப நாட்களில், நான் கேட்ட பாடல்கள் பல, கருத்தாழம் உடையவையாக இருந்தும், அவற்றின் இசை எனக்கு அந்நியமாக இருந்தது. எனவே என் மனவிருப்பத்திற்கு ஏற்றவாறு, கர்னாடக இசை வடிவில் பாடல்கள் இயற்றி என் தனிப்பட்ட வழிபாட்டில் பயன்படுத்தி வந்தேன். அவற்றை வெகுகாலம் யாருடனும் பகிர்ந்து கொள்ள வில்லை. அதற்கான காரணம் இங்கு விவாதிக்கப்பட வேண்டியது இல்லை. நான் முறைப்படி கர்னாடக இசை கற்கவில்லை. இராகங்களைக் கூட என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாது. ஆனாலும் கர்னாடக இசையை சிறுவயது முதல் கேட்டதன் காரணமாக, இராகங்களின் இலக்கணம் தெரியாவிட்டாலும், அவற்றின் சாயலில் நான் பாடல்களை எழுதி, இசை அமைத்துப் பாடினேன். அது போல், “இயேசு” என்ற சொல்லை “முக்தேசன்” என்று மாற்றி உபயோகப்படுத்தி உள்ளேன். “இயேசு” என்பதற்கு “முக்தி அளிப்பவன்” என்பது பொருள். எனவே அதைத் தமிழில் “முக்திக்கு + ஈசன்” = “முக்தேசன்” என்று பயன்படுத்தி உள்ளேன். ஆனால் இசை வடிவம் காரணமாக சில இடங்களில் அதைக் குறுக்கி ’ஈசன்” என்று பயன் படுத்தி உள்ளேன். அதுபோன்ற ’நீர், அவர்” என்ற சொற்களை, “நீ, அவன்” என்று மாற்றியுள்ளேன். இதற்குக் காரணம் இந்தியப் பண்பாட்டில் பக்தியில் இறைவனை ஒருமையில் அழைப்பதே பெரும்பாலும் வழக்கம். அதுவே எனக்கும் பழகிய ஒன்று. எனவே இறைவனைப் பன்மையில் கூறாமல் ,ஒருமையிலேயே கூறிஉள்ளேன்.
இப்பாடல்கள் என் தனிப்பட்ட ஆன்மாவின் குரல் எனவே, இவற்றின் கருத்து, சொற்கள் அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்காது, இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. நாம் பக்தியில் வளர மற்றவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. நம் சிந்தாத்தை புரிந்துகொள்ள, புரியவைக்க, மறைகளும், மறைசார்ந்த நூல்களும், பிறர் எண்ணங்கள், எழுத்துக்கள் நமக்கு நிச்சயம் உறுதுணையாக அமைந்திருக்கும். ஆனால், கவிதை என்று வரும்போது மட்டும், அது நம் தனிப்பட்ட அனுபவமாகவே அமையும். எனவே என் இப் பக்திபாடல்களும் நான் இறைவனுடன் ’தனிமையில் கண்ட இனிமை’ இப்பாடல்களைப் படிப்பவர்கள், பயன் படுத்துபவர்கள் இதை மனதில் கொள்ளவேண்டும். நன்றி.
Leave a Reply