ஆரம்பப் பயணம்

ஆரம்பப் பயணம்

என் நினைவில் இருந்த ஆரம்பகால என் பக்தி பாடல்கள் இந்த மூன்றுடன் நிறைவுறுகின்றது.  இப்பாடலகள் என் ஆரம்ப கால சமய நம்பிக்கை, பக்தி, சிந்தனை, சித்தாந்தத்தை ஓரளவு எடுத்துக் கூறுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் வளர்ந்த எனக்கு முக்தேசனனின் பக்தனாக ஆரம்பித்த ஆரம்ப நாட்கள் மிகுந்த போராட்டமாகவே இருந்தன.  ஆரம்பத்தில் எனக்குப் பரிச்சயமான திருச்சபை பாடல்கள், பொருளாழமுடையவையாக இருந்தபோதும், அவற்றின் இசை, பாடும் முறை என் பக்தியின் உணர்வுக்கு போதுமானதாக இருக்கவில்லை. எனவே, நான் என் தனிப்பட்ட வழிபாட்டிற்காக சில பாடல்களை எழுதி அவற்றை பயன்படுத்தி வந்தேன். ஆனால் அவற்றை வெகுகாலம் யாருடனும் பகிர்ந்து கொள்ள வில்லை.  இன்னும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகே அவற்றில் சிலவற்றை என்னைப் போன்ற இந்துவாக இருக்கும் முக்தேசனின் பக்தர்களிடைய பகிர்ந்து கொண்டேன்.  ஆரம்பத்தில் என்னுடன் நன்கு பழகி என்னை ஓரளவு புரிந்து கொண்ட சில கிறிஸ்தவ நண்பர்களிடம் கூட இப்பாடல்களை நான் பகிர்ந்து கொள்ளவில்லை. அவர்களின் ஒருவரின் மனைவி, பிறகு இப்பாடல்களை படித்தபோது ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்று என்னைக் கேட்டார். 

ஆரம்ப நாட்களில் என் இந்து சமய-கலாச்சார அடிப்படையில் சிறு சிறு செயல்கள் மூலம் என் எண்ணத்தை வெளிப்படுத்த முயன்றபோது, அவற்றை ஏற்றுக் கொள்ளாததுடன், நேரடியாகவும், மறைமுகமாகவும் சில கிறிஸ்தவர்கள் அதற்கு எதிர்பு தெரிவித்திதனால், நான் என் பாடல்களை மட்டும் மல்ல, என் ஆரம்பகால சில கட்டுரைகள், எண்ணங்களையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்வதை முற்றிலும் தவிர்த்தேன்.  படிப்படியாக நான் கிறிஸ்தவ சூழ்நிலை, அமைப்பு, போன்றவற்றிலிருந்து விலகிய பிறகே என் கருத்துக்களையும், கட்டுரைகளையும், பாடல்களையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். 

முக்தேசனில் ஆரம்ப கால என் பக்தி வாழ்க்கையில் சில கிறிஸ்தவ அமைப்புகளுடனும் (திருச்சபையுடன் அல்ல), நண்பர்களுடனும் தொடர்பு இருந்த நாட்களில் இந்திய/இந்து கலாச்சார அடிப்படையில் அமைந்த என் வாழ்க்கை (உ. ம். முற்றிலும் சைவ உணவையே உண்டது), என் எண்ணம், சொற்கள் (பகவான் என்ற சொல்லை அதிகம் பயன்படுத்துவது), இசை, இந்து சமய மறைகளைப் படிப்பது, கையாள்வது, எடுத்துக்காட்டாக பயன் படுத்துவது, மேலும் பொது வாழ்வின் காரியங்களை தொடர்பு படுத்தி சில விளக்கம் அளிப்பது (ஒரு சமயம் ஒரு முக்திவேதத்தின் கருத்திற்கு ஒரு சினிமாபாடலை எடுத்துக்காட்டாக கூறியது) போன்ற இன்னும் பல காரியங்கள் அவர்களில் பலருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்ததுடன், அவற்றை நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்க்க ஆரம்பித்தார்கள். எல்லாவிதத்திலும் நானும் அவர்களைப்போலவே மாறி, சிந்திது செயல்பட அவர்கள் செய்த முயற்சிகள் என்னில் எதிர்பார்த்த பலனை அவர்களுக்குத் தரவில்லை.  எனக்கு என் பக்தியை கொண்டாட, உணர எவையெல்லாம் என் கலாச்சார-பண்பாட்டின் அடிப்படையில் இருந்தனவோ அவை அவர்களுக்கு சற்று எரிச்சலைத் தந்தது. சுருக்கமாகச் சொல்லப்போனால், எவ்வளவு முயன்றும் என்னை அவர்கள் ஒரு ’கிறிஸ்தவனாக’ மாற்றவே முடியவில்லை. எனவே அவர்களிடையே இருந்த என்  ஆரம்ப கால வாழ்க்கை என்னை ஒரு அன்னியனாகவே வைத்திருந்தது.  ஆனால் அனைவரும் அவ்வாரு இருக்க வில்லை.  முனைவர் தேவதாஸ் என்பவர் என்னை நன்றாக புரிந்து கொண்டு பல விதங்களிலும் எனக்கு, என் கருத்துக்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்.  அவர்களைப் போல் மற்றும் சிலரும் என் கருத்துகளுக்கு உடன் பட்டனர். ஆனால் அவர்கள் அவர்களின் சூழ்நிலையை மீறி முற்றிலுமாக எனக்கு உதவ இயலவில்லை.

கிறிஸ்தவர்கள் என்னை தவறாக புரிந்து கொண்டார்கள் என்பதைக் காட்டிலும், என் கருத்தை அவர்களுக்கு என்னால் புரியவைக்க இயலாமல் போனதே இதற்கு முக்கியக் காரணம். ஆனால் நாளடைவில், நான் என் பக்தியையும், சிந்தனையையும் கிறிஸ்தவர்களுக்கு புரிய வைக்கத் தேவை இல்லை என்ற எண்ணம் மனதில் உறுதியானபிறகு, என்னைப் பற்றிய பிறரின் கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் பயப்படாமல், நான் என் இயற்கை நிலையில்–அதாவது ஒரு இந்துவாக இருந்து கொண்டு, முக்தேசனின் பக்தனாக வாழ பிறரின், குறிப்பாக கிறிஸ்தவர்களின் அங்கீகாரமோ, ஆதரவோ, அவசியம் இல்லை என்பதை உணர்ந்தபின் என்னைப் பற்றிய பிறரின் கணிப்புகள், கருத்துகளுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்காமல், இறைவன் எனக்கு என் பிறப்@புரிமையாக தந்த சமய-கலாச்சார-பண்பாடின் அடிப்படையிலே வாழ் ஆரம்பித்தேன். அந்த விடுதலையை கொண்டாடும் விதமாக, என் ஆரம்ப கால பாடல்களை மட்டும் மல்லாது, பிறத்கு முழு சுதந்திரத்துடன் இந் நாட்டின் சமய-கலாச்சார-நாகரீக-பண்பாட்டின் அடிப்படையிலேயே பல பாடல்களை எழுத ஆரம்பித்தேன்.  எனவேதான்   என்பாடல்களை மட்டும் படிப்பதால் என் எண்ணத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது என்ற கருத்தால், ஒவ்வொரு பாடலுக்குப் பின் உள்ள பிண்ணனி, என் விளக்கவுரையும் அவசியம் எனக் கருதி எழுதி அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

குறிப்பாக பக்தி பாடல்கள் என வரும்போது அவை கர்னாடக இசை வடினில் பாடுவது, கேட்பது என்பது எனக்கு பழக்கமான ஒன்று. நான் முறைப்படி கர்னாடக இசையை கற்கவில்லை. ஆனால் சிறுவயது முதலே அதைகேட்டு வளர்ந்து வந்தேன். என் தந்தை எந்த இராகத்தை பாட ஆரம்பித்தாலும், உடன் அதை கூறிவிடுவார். என் சகோதரிகளில் ஒருவர் வீணை கற்றுக் கொண்டார். என் அம்மாவும் நன்றாக பாடுவார்கள். சிறுவயதில் என் தந்தை எங்களை திருவையாரில் நடக்கும் திரு தியாகராஜர் ஆராதனைக்கு அழைத்துச் செல்வார். அது போல் கோயில்களில் நடக்கும் கச்சேரிகளுக்கும் தவராமல் சென்று கேட்பது உண்டு. நானும் என் கல்லூரி நாட்களில் புல்லாங்குழல் கற்க முயன்றேன். ஆனால் எனக்கு சொல்லித் தந்த ஆசிரியர், சில வகுப்புகளுக்குப் பின் திடீரென்று மரணம் அடைந்தவுடன், என் பயிற்சியும் நின்றது. அபொழுது என் நண்பர்களும், மற்றவர்களும், கேலியாக ’உனக்கு சொல்லிக் கொடுத்து, நீ பயிற்சியில் வாசிக்க ஆரம்பித்தைக் கேடவுடன், உன்னிடம் இருந்து தப்பிபதற்காகவே அவர் உலகைவிட்டு சென்றுவிட்டார்’ என்று நகைச்சுவைக்காக கூறினார்கள். ஆனால் அத்துடன் என் இசைபயிலும் கனவும் முடிவுக்கு வந்தது. எனவேதான் என் தனிப்பட்ட பக்தி வழிப்பாட்டிற்காக கர்னாடக இசை அமைப்பில் பாடல்களை எழுத ஆரம்ப்பித்தேன்.

அடுத்து நான் பயன் படுத்திய சில வார்த்தைகளைப்பற்றியது. தமிழில் கிறிஸ்தவர்கள் பயன் படுத்தும் ’இயேசு’ என்ற சொல் ஒரு மதத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கப்பட்டதால், பிறகு நான் அதன் பொருளை அடிப்படையாகக் கொண்டு ’முக்தேசன்’ (முக்திக்கு ஈசன்) என்று மாற்றி பயன் படுத்தி வந்தேன். ஆனால் என் சில கிறிஸ்தவ நண்பர்கள் அவர்கள் பயன்படுத்தும் ’இயேசு’ என்ற சொல்லையே விரும்பியதால், என் பாடலை அவர்கள் பயன் படுத்தியபோது, நான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஏன் என்றால் தனி மனித சுதந்திரத்தில் எனக்குள்ள நம்பிக்கையால், பிறருக்கு எது இயல்பாக தோன்றுகின்றதோ அதை அவர்கள் பயன்படுத்த நான் எந்த மறுப்பும் கூறியது கிடையாது. ஆனால் இதில் வியக்கத்தக்க ஒரு காரியம் என்ன வென்றால், திருச்சபைகளில்,100 ஆண்டுகளுக்குமுன் எழுதி பயன்படுத்தப்பட்ட பல பாடல்கலிள் (கீர்த்தனைகளில்) நிறைய இந்து சமயச் சொற்கள் எந்தவிதமான தயக்கமும் இன்றி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. உதாரணமாக வேதநாயகம் சாத்திரியாரின் பல கீர்த்தனைப்பாடல்களில் ’ஓம்’, ’சிவம்’, ’பகவான்’ போன்ற சொற்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் சுதந்திரத்திற்குப் பி\றகு அத்தகைய பாடலகள் அல்லது சொற்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது. இதை நான் எதோ கிறிஸ்தவர்கள் என் பாடல்களில் காணப்படும் இந்து சொற்களுக்கு அங்கீகாரம் தரவேண்டும் என்பதற்காக கூறவில்லை.  ஒரு இந்துவாக என் சமய, கலாச்சார, நாகரீக, பண்பாட்டு அடையாளங்கள், சொற்கள் போன்றவற்றை என் பிறப்புரிமையாக நான் பயன் படுத்துவதற்கு எவருடைய அங்கீகாரமோ, ஆதரவோ தேவையில்லை. அது போன்றே சில தீவிர இந்து அமைப்பினர் என் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதைக்கண்டு நான் அஞ்சத்தேவை இல்லை.

பக்தியில் இறைவனுடன் நமக்குள்ள தொடர்பு மாத்திரம் முக்கியம் அல்ல. அவனின் திரு நாமமும் நமக்கு முக்கியமான ஒன்று. எனவே பொதுவான, சமயம்சார்ந்த ஒரு பொதுச்சொல்லிற்கு விளக்கம் அளிப்பதைக்காட்டிலும், அதன் பொருள், மற்றும் அது என் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பக்தனாக இறைவனும் எனக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் விதமாக அமைவதும் முக்கியம். ’இயேசு’ என்ற வார்த்தைக்கு ’காப்பவன், முக்தி அளிப்பவன்’ போன்ற பொருள்கள் இருந்தாலும், அதைத் தமிழில் ’முக்திக்கு ஈசன்’ என்று நான் பயன்படுத்தும் போது அதன்பொருள் நன்கு விளங்குவதுடன் (விளக்கப்படுவதுடன்), அது எனக்கு அவனுக்கும் உள்ள தனிப்பட்ட உறவை பறைசாற்றும் விதமாக உள்ளது. ’ஈசன்’ என்ற சொல்லிற்கு ’தலைவன்’, இறைவன், உரிமையுள்ளவன்,’ போன்ற பொருட்கள் அவனுக்கு என்மீது உள்ள உரிமையை, உறவை இன்னும் அதிகமாக வலியுறுத்துவதால் ’முக்தேசன்’ என்ற பெயரையே நான் பயன்படுத்த விரும்புகிறேன்.

அது போன்றே இறைவனை ஒருமையில் அழைப்பது நமக்குப் பழக்கப்பட்ட ஒன்று. ஆனால் கிறிஸ்தவர்களுக்கு அது ஏற்புடையதாக இருப்பதில்லை. இந்திய பண்பாட்டில் அனேகமாக எல்லா சமயத்திலும் இறைவனை/இறைவியை உரிமையில் ’ஒருமையில்’ அழைப்பது வழக்கம். ஆனால் இறைவன் அடியார்களை பன்மையில் ’அவர்’ என்று குறிப்பிடுவதும் வழக்கம். குறிப்பாக அந்தணர்கள் இல்லங்களில் பெற்றோரையும், உடன் பிறப்புகளையும், ஏன் இன்னும் சில இல்லங்களில் தாய்மாமன், அத்தை, தாத்தா-பாட்டியையும் ஒருமையிலேயே அழைப்பது வழக்கம். அவர்களைப்பற்றி பிறரிடம் குறிப்பிடும்போது பன்மையை பயன்படுத்தினாலும், அவர்களை அழைக்கும்போது ஒருமையை பயன்படுத்துவதே வழக்கமான ஒன்று. நான் அத்தகைய சூழ்நிலையிலேயே வளர்ந்து வாழ்ந்தவன். எனவே எனக்கு இறைவனை ’பன்மையில்’ அழைப்பது சற்று மாறுபட்டதாக இருந்து.  குறிப்பாக பாடல்களில் நான் பெரும்பாலும் ஒருமையையே பயன்படுத்தியுள்ளேன். ஆரம்பத்தில் எழுதிய சில பாடல்களில் பன்மை பயன்படுதி இருந்தாலும், பிறகு அவற்றை ஒருமைக்கு மாற்றியுள்ளேன். ஆனால் இன்னும் சில பாடல்களிள் அவற்றை சரிசெய்ய வேண்டியுள்ளது.

மிகைப்படுத்துதல்

மிகைப்படுத்துதல் என்பது கவிதைக்கு உள்ள அழகு. இதை கவிஞ்ஞர் வயிரமுத்து, ’கண்ணுக்கு மையழகு, கவிதைக்கு பொய்யழகு’ என்று தெளிவாகக் கூறி உள்ளார்.  தன் சித்தாந்தக் கருத்தை முடிவாக அறுதியிட்டுக் கூறுவதற்காக என்று எழுதப்பட்ட பாடல்கள், மற்றும் பாடல்களுக்கு வேண்டுமானால் சித்தாந்தத்தின் அடிப்படையில், முரண்பாடுகளை விளக்கி உரை எழுதுவது சரியாக இருக்கலாம். ஆனால் பரவசமிகுதியால் எழுதப்படும் எந்தப் பாட்டிலும் முரண்பாடுகளும், மிகைப்படுத்தலும் இயற்கையாக இருக்கும். அவற்றை அவற்றின் பரவசத்திற்காக மட்டுமே படித்து இன்புற வேண்டும்

பல சமயம் பாடல்களில் ஒரே சீரான வரிகள், வார்த்தைகளை அமைக்கவேண்டி பல செயற்கையான சொற்களை இடையில் சேர்ப்பது உண்டு. பல சமயம் நான் பாடல்களை எழுத ஆரம்பித்தபின் நான்கு நான்கு வரிகளாக எழுதிக் கொண்டு வருவேன். சில சமயம் மூன்று வரிகளிலேயே சில பகுதி முதலில் அமையும். ஆனால் தொடர்ந்து பாடலை எழுதி முடித்தபின் , இடையில் மூன்று வரிகளுடன் இருந்த பகுதியை மற்ற பகுதிகளில் உள்ள நான்கு அடியாக மாற்ற, நான் யோசித்து, செயற்கையாக ஒரு வரியை சேர்ப்பேன். சில சமயம் சில வார்க்கைகளைக் கூட எதுகை மோனைக்காக வேண்டி பிறகு மாறியது உண்டு.  இப்படி பாடல் அமைப்பு மற்றும் இலக்கணத்திற்காக வார்க்தைகளையும், வரிகளையும் பிறகு சேர்ப்பது என்பது வழக்கமான ஒன்று. இதை குறிப்பாக சமஸ்கிருத ஸ்லோஹங்களில் காணலாம்.

உதாரணமாக பகவத் கீதையில் 6:35 எடுத்துக் கொள்வோம்:

அஷம் ஸயம் மஹாபாஹோ மனோ துர்நிக்ரஹம் சலம்

அப்யாஸேன து கொளந்தேய வைராகேயேன ச க்ருஹ்யதே

-வலிமையான தோகளைக் (மஹாபாஹோ) கொண்டவனே, உண்மையிலேயே மனம் மிகவும் சஞ்சலமானது, அதை வசப்படுத்துவதும் மிகவும் கடினமான ஒன்று.

ஆனால் குந்தியின் மகனே (கொளந்தேயனே), பயிற்சியாலும், உறுதியான தீர்மானத்தாலும் அதை வசப்படுத்தமுடியும்

இந்த ஸ்லோகத்தில் முதலடியில், அர்ஜூனனின் பெயர் ’மஹாபாஹோ’ என்றும், இரண்டாம் அடியில் ’கொளந்தேய’ என்று வருகின்றது. ஒரே ஸ்லோகத்தில் இரண்டு இடங்களில் ஒருவரது பெயரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.  ஆனால் இந்த ஸ்லோகத்தின் அமைப்பிற்கு அது தேவையாய் இருக்கின்றது. அந்த இரண்டு பெயர்கள் இல்லாமல், இலக்கணமுறைப்படி இந்த ஸ்லோகம் முற்றுப் பெற்றதாய் இருக்காது. இது குறித்த மேலும் விபரங்களை கீழே குறிப்பில் காணலாம்.1 ஆனால் அதை தமிழில் மொழிபெயர்க தேவை யில்லை.

இதுபோன்ற தமிழிலும் காணலாம். உதாரணத்திற்கு ஒரு தேவாரப் பாடலை எடுத்துக் கொள்வோம்:

பொன்னும் பெய்ப்பொருளும் தருவானை

போகமும் திருவும் புணர்ப்பானை,

பின்னை என் பிழையைப் பொறுப்பானை,

பிழையெலாம் தவிரப் பணிப்பானை,

இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா

எம்மானை, எளிவந்த பிரானை,

அன்னம் வைகும் வயல்-பழனத்து அணி

ஆரூரானை, மறக்கலும் ஆமே?-7.59.1

இந்தப்பாடலின் ஏழாம் அடியில் காணப்படும் ’அன்னம் வைகும்…..’ என்பது இல்லாமல் கூட இப்பாடலின் பொருள் முழுமையாக இருக்கும். ஆனால் இலக்கணப்படி இந்த வரி இல்லாமல் இப்பாடல் சரியாக இருக்காது. எனக்கு தமிழ் இலக்கணம் சரியாகத் தெரியாது.  ஆனால் வெண்பா, கலித்தொகை போன்ற பாடல்களில் சொற்களின் எண்ணிக்கையும், வரிகளும் ஒரு பாடல் முழுமை பெற அவசியம்.

எனவே பாடல் எழுதும் போது, பொருளுக்கு மட்டும் அல்லாமல், எதுகை, மோனை, இலக்கணம் போன்றவற்றிற்கும் முக்க்தியத்துவம் தரப்படுவதால், ஒரு பாடலில் காணப்படும் எல்லா வார்த்தைகளையும் சித்தாந்ததின் அடிப்படையில் பொருள் காண இயலாது. சில சமயம் நான் எதுகைக்கு ஏற்றபடி மோனை அமைய வேண்டி அந்த சொல்லை முதலில் எழுதிவிட்டு, அதன் பிறகு பிற வார்த்தைகளி எழுதி நிறைவு செய்துள்ளேன். அந்தாதியில் அமையும் பாடலிகளிலும் இதைக்காணலாம். எனவே பாடலாசிரியர் கூறவராத சித்தாந்தங்களை ஒரு பாடலில் காண முயல்வது தவறாக அமையும். பின்னால் சேர்க்கப்பட்ட ’இடைச் சேர்கைகளும்’ ஒரு பாடலின் உண்மையான சித்தாந்தத்தை தவராகச் சித்தரிக்கும். ஆனால் வியாக்கியானங்கள் எனப்படும் விரிவுரைகள் பல முறண்பாடுகளை நீக்க உதவினாலும், உரையாசிரியர் சில சமயம் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை காண முயலும் போது பாடலாசிரியரின் கருத்துக்கு அப்பால் சென்று விடமுடியும்.

உதாரணத்திற்கு ’மஹாபாஹோ’ என்ற இடத்தில் ’கொளந்தேய’ என்று மாற்றி அமைத்தாலும் அந்த ஸ்லோகத்தை உச்சரிப்பதிலும், இலக்கணத்திலும் தவறு ஏற்படும். ஆனால் ஒரு உரையாசிரியர் தன் அதிகப்படியான ஆர்வத்தின் காரணமாக அர்ஜூனனின் இந்த இரண்டு பெயர்களுக்கும் தனியான விளக்கம் அளித்தால் அது இயற்றியவரின் நோக்கத்திற்கு அப்பாற் சென்றுவிடும். மஹாபாஹோ என்பது அர்ஜூனனி தோள்வலிமையையும், ’கொளந்தேய’ என்பது அவன் குந்திக்கு இந்திரன் மூலம் பிறந்ததை குறிபதுமாக இருந்தாலும், இவ்விரண்டு வார்த்தைகளும் இங்கு பயன் படுத்துவதனின் நோக்கமும் இலக்கண முறைப்படி அந்த ஸ்லோகத்தை நிறைவு செய்வதுதான். பஞ்ச பாண்டவர்கள், பாண்டுவின் புதல்வர்களாக கருதப்பட்டாலும், பாண்டு  உடலால் அவர்களின் தந்தை இல்லை என்ற ஒரு தகவலை வேண்டுமானால் தரலாமே தவிர, இலக்கணத்தை மீறி வேறு சிறப்பான சித்தாந்தத்தை இந்த ஸ்லோகத்தில் காண முடியாது.

நானும் கூட என் பக்தியின் பயணத்தை கூறுவதாகக் கூறிக்கொண்டு பாடல்களுக்கு அப்பாற்பட்ட அதிகப்படியான விளக்கங்களை தருவதும் கூட இது போன்ற ஒரு செயலே. ஆனால் என் பக்தியின் பயணத்தின் இடையே என் சித்தாந்தத்தை கூறுவதுடன், அவை சார்ந்த சில தகவல்களை தறுவதும் என் நோக்கமாகும். ஆனாலும், தலைப்புகுச் சம்பந்தமில்லாத அதிகப்படியான குறுக்கீடுகளும், படிப்பவர்களுக்கு நிச்சயம் எரிச்சலைத் தரும்.

10-10-2014

Notes

1 …{in}Samaveda … we have a series of chants in which the words fit the music in the first instance but less closely, or hardly at all, in those that follow. It shows that the words for the first had been carefully selected to fit the melody; after which others, different in length and number, were forced into the same format as if confined in a straitjacket.  When (p. 107) words do not fit, they are changed or transformed and embellishments called stobha are inserted.  They are meaningless like the sounds of a lullaby.  According to a commentator, the term stobha is used even in daily life to refer to a meaningless string of sounds, something that may be uttered by a joker for killing time….— Frits Staal, Discovering the Vedas,: Origins, Mantras, Rituals, Insights,  New Delhi, Penguin Books, 2008. pp. 107-08

…Insertion and transformation may have happened on several levels, as in the Rigveda verse: abhi tvaa suura nonumo ‘dugkhaa iva dhenavah/ iisaanam asya jagatah svardrsam iisaanam indra tasthusah, ‘we cry out for you, hero, like unmilked cows to the lord of this living world, to the lord of the unmoving world whose eye is the sun O Indra!’  It has been turned into a famous chant called Rathantara, ‘Excellent Chariot’.  It is one of the two that the Rigveda mentions. Its Samavedic form is: obhitvaasuuranonumovaa/ aadugdhaa iva dhenava iisaanamasya jagatassuvaardrsaam/ iisaanamaa indra / taa sthu saa o vaa haa u vaa/ aas//

            The stobhas are o vaa haa u vaa and aas.  They may occur almost anywhere but have here been put at the end.—ibid. p. 109

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *