நான்: அம்மா, மத்யான டிபனுக்கு இட்டிலி பண்ணட்டுமா?
அம்மா: வர வர எனக்கு இட்டிலி வாசனையே பிடிக்கல.
நான்: தோசை?
அம்மா: மிளகாய்ப் பொடி எண்ணை ஒத்துக்காது.
நான்: கோதுமை தோசை?
அம்மா: வழ வழ, கொழ கொழ. வேண்டாம்.
நான்: ரவா தோசை?
அம்மா: உனக்கு சரியா போட வராது. வரட்டி மாதிரி போடுவ.
நான்: ராகி மாவு தோசை?
அம்மா: அதுக்கு களியே திங்கலாம்.
நான்: பொங்கல்?
அம்மா: மிளக அள்ளிக் கொட்டுவ. நெய்யே ஊத்தமாட்ட. பிசுக்கு பிசுக்குன்னு ஓட்டும்.
நான்: உப்புமா?
அம்மா: அதெல்லாம் ஒரு டிபனா?
நான்: அவல் உப்புமா?
அம்மா: எல்லா உப்புமாவும் ஒரே கழுதைதான்.
நான்: உனக்குத்தான் அரிசி உப்புமா பிடிக்குமே, போடட்டுமா?
அம்மா: நீ களியாட்டம் கிண்டி வைப்ப.
நான்: இட்டிலி உப்புமா?
அம்மா: புளிச்சு வழியும்.
நான்: சேமியா கிச்சிடி?
அம்மா: பாத்தாலே புழுவாட்டம் இருக்கும்.
நான்: சேவை?
அம்மா: அதுக்கு மாவு பாத்து கிளறணும். சரியா புழியணும். நன்னா வேகவைக்கணும். உனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது.
நான்: சரி, பூரி உருளைக்கிழங்கு பண்ணறேன்.
அம்மா: எண்ணை ஒடம்புக்கு ஆகாது. உருளைக்கிழங்கு வாயு.
நான்: எண்ணை போட்ட சப்பாத்தி?
அம்மா: பல்லா இருக்கு கடிச்சு திங்க.
நான்: கலவை சாதம் செய்யட்டுமா?
அம்மா: ஏண்டா, அதெல்லாம் டிபன்ல சேத்தியா?
நான்: காய்கறி சாதம்?
அம்மா: அதுமட்டும் என்ன வாழ்ந்தது?
நான்: அடை பண்ணறேன்.
அம்மா: நெஞ்ச கறிக்கும். ஜீரணமே ஆகாது.
நான்: சுண்டல்?
அம்மா: என்ன கிண்டலா, பல்லு இல்லேன்னு உனக்குத் தெரியாதா?
நான்: தயிர் சாதம்?
அம்மா: எதுகளிச்சுண்டு வரும்.
நான்: சரி, என்னதான் பண்ணட்டும்?
அம்மா: உனக்கு என்ன வேணுமோ அத பண்ணு. பிடிச்சா திங்கறேன், இல்லாட்டா ரெண்டு வாய் போர் சாதம் போட்டுண்டு தேமேன்னு கிடக்கிறேன்.
நான்: அண்ணா கூட இருந்தபோ எத கொடுத்தாலும் சாப்பிட்டா. இப்ப மட்டும் இத்தனை நொட்டாஞ்சொல் சொல்லற. எப்பாவது பொண்ணாத்துக்கு போனா நன்னா இல்லாட்டாலும் வாய் மூடிண்டு சாபிடற.
அம்மா: அங்க மாட்டுப் பொண்ணுகிட்ட எதுமே பேச முடியாது. பொண்ணாத்துல நன்னா இல்லேன்னு சொன்னா அவ ஆம்படயான் இதுதான் சாக்குன்னு நான் சொன்னா ஒத்துக்க மாட்டேங்கிறேயே. இப்ப பாரு, உன் அம்மாவே சொல்லறா பாரும்பான்.
நான்: சரி, என்னதான் செய்யட்டும்?
அம்மா: சரி, சரி, வளவளன்னு பொம்மணாட்டியாட்டம் பேசாம ஒரு தோசை போடு. எண்ணைய கம்மியா ஊத்து. அதுக்காக மிளகாய்ப் பொடியில எண்ணைய கம்மி பண்ணாத. சக்கரைய கொஞ்சம் அதிகமாவே மிளகாய்ப் பொடியில போடு. எனக்குத்தான் உனக்காட்டம் சக்கரை இல்லையே. புளிக்காத தயிர் எடுத்து வச்சிருக்கில்ல. ரொம்ப மெல்லிசா ஊத்தாதே. அதுக்காக ஊத்தப்பமாட்டம் மொத்தமா போடாதே. நல்லவேள நீ கல்யாணம் பண்ணிக்கல. ஒரு பொண்ணு தப்பிச்சா.
நான்: உங்கிட்டேந்து இன்னும் ஒரு மருமகத் தப்பிச்சான்னு சொல்லு. எதுக்கெடுத்தாலும் குறை.
அம்மா: ஏண்டா, சொல்ல மாட்டேன். என் வயசுவரைக்கும் இருந்து பாத்தா அப்பத் தெரியும். குறை சொல்லாம சாப்பிட்டா ஜீரணமும் ஆகாது, தெரிஞ்சுக்கோ.
நான்: இவ்வளவு சர்க்கரை போடணுமா?
அம்மா: ஒண்ணு ஆயிடாது. வயசான காலத்திலே இத சாப்பிடாத, அத சாப்பிடாதன்னு சொல்லாத. வாய்க்கு பிடிச்சதை சாப்பிட்டு போய்ச்சுரேன்.
நான்: ஏற்கனவே குண்ட்டாயிருக்க. இப்படி சர்க்கரை சாப்பிட்டா இன்னும் குண்டாயிடுவ.
அம்மா: ஆயிட்டுப் போறேன். செத்தா நீயா தூக்கப்போற. ஏற்கனவே வெளியில போகாதா, வாசல்ல போகாதீங்கிறானுங்க. கிட்ட வராதே, ஒண்ணா ஓக்காராதே, ஒண்ணா உட்காந்து சாப்பிடாதேன்னு சொல்லறானுங்க. அத்தோட சேர்ந்து நீ என்னடான்னா உப்ப குறைச்சுக்கோ, சர்க்கரைய குறைச்சுக்கோங்கிற.
நான்: நானா சொல்லறேன்? டாக்டர் சொல்லறார்.
அம்மா: டாக்டர் ஆயிரம் சொல்லுவாங்க. எல்லாத்தையும் கேட்கக்கூடாது. சாப்பாட்டுவிஷயத்தில நம் மனசுக்கு என்ன பிடிக்குதோ, சரின்னு படுத்தோ, அதைத்தான் செய்யணும்.
நான்: நீ ஒருத்திதாம்மா என் சமையல் பற்றி இத்தனை குறை சொல்லற. மத்தவா எல்லாம் நன்னா இருக்குன்னுதான் சொல்லறா. ஆஸ்ரமத்துக்கு வரவா எப்படி நன்னா சாபிடறான்னு பாரு.
அம்மா: இதுலேந்து தெரியலயா, அவனுங்க ஆம்படயாலெல்லாம் எந்த லாச்சாணத்தில சமைக்கிறான்னு. ஆல இல்லாத ஊருக்கு இலுப்பப் பூ சக்கரையாம். நீ சன்னியாசியே இல்ல, ஒரு சமையல் காரன். இப்படி ஆஸ்ரம் நடத்துறதுக்கு பதிலா, ஒரு ஹோட்டல் வைத்திருந்தா, நானா சம்பாதிச்சாவது இருப்பேன்.
நான்: ஏன், உன் பெண்ணு, பேரன், பேத்தியெல்லாம் கூட என் சமையல் நன்னாத்தான் இருக்குன்னு சொல்லறா.
அம்மா: மெற்றாஸ்காராளுக்கெல்லாம் வெளியூர் சமையலும் சாப்பாடும் எப்பவுமே பிடிக்கும்.
நான்: அப்போ ஏன் நான் போடற ஊர்காயை இப்படி வழிச்சு வழிச்சு திங்கற?
அம்மா: உன்னை யார் இப்படி நன்னா போடச்சொன்னது. நான் சொல்லிக்கொடுக்காமத்தான் நீயே புறக்கறப்போ கட்டுண்டு வந்தாயாக்கோ.
முடிவு: கடைசியாக ஒரு தோசை, ஒரு ஸ்பூன் மிளகாய்ப் பொடியுடன், இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, ஒரு கப் புளிக்காத தயிருடன் இன்றைய டிபன் யுத்த காண்டம் முடிவுற்றது. கடவுளே, நாளைக்கு இட்டிலி இருக்கு. எப்படி சமாளிக்கப் போறேனோ.
23-6-2021
Leave a Reply