Bhakti Gita Chapter Seventeen

பதினேழாம் அதிகாரம்

புனித யோகம்:

(முக்தேசன் கூறினான்:)

1. இதயத்தில் தூய்மை உள்ளோனே புனிதன்

அவனே பெறுவான் இறைவன் காட்சியை.

2. நல்வாழ்வு நாளும் வாழ்பவன் புனிதன்

அவனே அடைவான் ஞானக் கனியை.

(முனிவர் கூறினார்:)

3. உன்னை அழைத்தவன் புனிதம் ஆனவன்,

அவன் போல் உன்வாழ்வும் என்றும் அமையட்டும்.

4. ’என்போல் புனிதனாய் நீயும் இருந்திடு’

என்ற வாக்கின்படி நீயும் வாழ்ந்திடு.

5. கறை, திரை, களங்கம் ஏதுமில்லாமலே

என்றும் அவனாலே அழைக்கும் படிஇரு.

6. அவன் தந்த வாக்கு  நமக்கென்றும் உள்ளதால்

அகத்திலும், புறத்திலும் தூய்மையாய் வாழ்ந்திடு.

7. இறைவனுக்குகந்தே புனிதமாய் வாழ்ந்து

பயத்துடனே அதில் நீ முழுமை அடைந்திடு.

8. ஆண்டவன் சீடரின் பாதத்தைக் கழுவிட

அவருள் ஒருவன் குருவிடம் கேட்டான்:

9. ’எப்படி நீயும் எனக்கிதைச் செய்யலாம்

என் பாதம் நீர்கொண்டு நீயும் கழுவலாம்?’

10. ’இப்படி நான் செய்ய நீயும் மறுத்தால்

என்னிடம் உனக்குப் பங்கேதுமில்லை,’

11. என்றே பதில்கூறி அவன்பாதம் கழுவி

அன்புடனே ஆண்டவன் சேவகம் செய்தான்.

(பக்தர்கள் கூறினார்கள்:)

12. கருணையும், அன்பும் ஒன்றாகி நம்மைக்

காத்திட உலகில் வந்திட்ட போது!

13. புதிய பிறவியும் தந்துமே நம்மில்

புனித ஆவியை அவனுமே அளித்தான்.

14. ஆன்மாவில் புனிதம் அடைந்த நாமும்

அன்பே செய்வோம் சத்தியம் அறிந்து.

15. அக அழுக்கை நீக்கிப் புனிதமடைந்து

ஐயனுக் கேற்ற பாத்திரமானால்,

16. அவன்சேவைக்குகந்த வண்ணமே நாளும்

நம்வாழ்க்கை என்றும் நாதனுக்காய் மாறும்.

17. கடவுள்முன் உலகினால் கறையும் படாது

கருத்துடன் வாழ்வில் கவனமாய் வாழ்ந்து,

18. தேவை உள்ளோரின் விருப்பம் அறிந்து

சேவை செய்வதே மெய்யான பக்தி.

19. ஆண்டவனின் நாமத்தை அறிந்திட்ட நாமும்

அநியாயம் தன்னையும் அறவே நீக்குவோம்.

20. இத்தகைய வாழ்க்கை வாழ்வதின் மூலம்

இதயத்தில் தூய்மையாய் என்றுமே இருப்போம்.

21. தன்நெஞ் சறியப் பொய்த்தால் ஆண்டவன்

நம்மனதை அறிந்து நியாயமே செய்வான்.

22. தன்னுடையமகிமையில் நாம் பங்கு அடைய

நம்மையும் சீராக்கி நல்லதே செய்வான்.

23. அமைதி தரவந்த அவனே நமக்கு

அகத்திலும் புறத்திலும் தூய்மையும் அருளி,

24. தன்னுடன் நம்மையும் அழைத்துமே செல்லப்

புண்ணியம் நாளுமே புதிதாக அருள்வான்.

25. மனதிலும், வாழ்விலும் வஞ்சகம் செய்து

ஆண்டவன் அருளுக்குத் தூரவே நின்றோம்!

26. அவன் தந்த பலியாலே புனிதமடைந்தநாம்

அவனேற்கும் பொருளாக நம்மையே படைப்போம்.

27. இறைவன் பிள்ளையாய் என்றுமே வாழ்ந்திடக்

குறையின்றி மனதிலே குழந்தைபோல் ஆவோம்.

28. மாறுபாடு உள்ள பொய்யான உலகில்

மகிமையாய் அவனுக்கு ஒளியாக வாழ்வோம்.

29. நமக்காகத் தம்மையே பலியாக அளித்து

இறைவனுக்கேற்ற தூயவழியானான்.

30. இருளான வாழ்வையும் நீக்கியே இனிநாம்

இறைவனுக்கென்று தூய்மையாய் வாழ்வோம்..

புனித யோகம் என்ற பதினேழாம் அதிகாரம்

இத்துடன் நிறைவுற்றது.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *