அதிகாரம் இருபது
பக்தர் குழாம்
(முக்தேசன் கூறினான்:)
1. இரண்டு, மூன்று பக்தர்கள் கூடி
வழிபட அவரிடை நானிருப்பேன்
2. திராட்சைக் கொடியாய் நானிருக்க
திரளான கிளையாய் நீ இருப்பாய்.
(பக்தன் கூறினான்:)
3. அங்கங்கள் வேறாக இருந்திடினும்
அவயம் என்பது ஒன்றுதானே
4. பலப்பல அங்கமாய் நாமிருந்தும்
ஐயன் அவயமாய் நாமிருப்போம்
5. அவயம் ஒன்றாய் இருந்திடினும்
அங்கங்களின் பணி மாறுபடும்
6. ஐயனின் அவயமாய் நாமிருந்தும்
தொண்டுகள் நம்மிடை வேறுபடும்
7. இனத்தில் எவராய் இருந்தாலும்
பரமனின் பக்தியில் ஒன்றானோம்
8. தூரமாய் விலகி நாமிருந்தும் தன்
கிருபையால் நம்மை அருகழைத்தான்
9. தன்னிலே நம்மையும் ஒருங்கிணைத்து
தரணியில் புதுமை வாழ்வளித்தான்
10. குலத்தில் வேறாய் நாம் பிறந்தும்
வேற்றுமை நம்மில் இனி இல்லை
11. ஆணென்றும், பெண்ணென்றும், அடிமையென்றும்
ஆண்டவனுள் இனிப் பேதமில்லை
12. ஆண்டவன் புதிதாய் நமைப்படைத்தான்
அவனில் நாம் புதுப் பிறவி பெற்றோம்
13. தேகத்தின் தலையாக அவன் இருக்க
சேர்ந்தோம் நாம் ஒரு தேகமாக
14. இறைவன் அளிக்கும் அருளாலே
வளர்ந்தோம் இணைந்தோர் சாயலாக
15. அவயவமாய் வளர்ந்தவன் சாயலாவோம்
அவனுக்குள் ஒன்றாய்ப் பெலப்படுவோம்
16. தத்தம் பணிகளை நாம் செய்ய, அவன்
தேகத்தின் அங்கமாய் வாழ்ந்திருப்போம்
17. தன்விருப்பம் போல் தெரிவுசெய்தான்
தன்தேகத்தின் அங்கமாய்த் தொண்டு செய்ய
18. அவயத்திற் கவயம் வேறுபடும்
அதுபோல் தொண்டும் மாறுபடும்
19. ஒரேவிதமாய்ச் செயல் பட்டால்
உதவா அங்கமாய்த் தான் இருப்போம்
20. ஓர் அங்கமாக உடல் இருந்தால்
’தேகம்’ என்றதைக் கூறுவோமா?
21. பல்வேறு அங்கம் இருந்தால் மட்டும்
பயனுள்ள தேகமாய் நாமிருப்போம்
22.பலப்பல பணிகளை நன்கமைத்து
இறைவனே தேகத்தை வடிவமைத்தான்
23. ஒன்றுக்கொன்று உதவிசெய்து
ஒன்றாக வாழ வழி அமைத்தான்
24. ஓரங்கம் துன்புற உடல்துடிக்கும்
மறுஅங்கம் இன்புற உடல்மகிழும்
25. தொண்டு மாறினும் பக்தி ஒன்றே
பணிபல ஆயினும் இறைவன் ஒன்றே
26. ஒன்றாக்கி நம்மை இயக்குகின்ற
கடவுளின் ஆவி தானும் ஒன்றே
27. தங்குவான் நம்மிலே தனித்தனியே
தன்சேவை ஒன்றாய் நாமும் செய்ய
28. ஒவ்வொரு அவயவமும் அவனில்நின்று
ஓரங்கமாகும் நாம் மேன்மையுற
29. இந்த ஒருமையைப் பேணிடுவோம்
ஒன்றாய் அமைதியில் வாழ்ந்திடுவோம்
30. நம்மில் பலவாய்ப் பிரிந்திருந்தும்
இறையான்மா ஒரு தேகம் என்று
31. என்றே ஒன்றாய் இணைந்திருப்பான், நம்
எல்லோர்க்குள்ளும் நிலைத்திருப்பான்.
(முக்தேசன் கூறினான்:)
32. தந்தையே, நாம் ஒன்றாய் இருப்பதுபோலே
தரணியில் அவர்களை ஒற்றுமையாக்கிடு
33. என்நாமம் தன்னிலே ஒன்றாகி அவரும்
என்றுமே நம்புகழ் போற்றியே வாழ
34. என்மேன்மை தன்னையே அவருக்கு அளித்தேன்
என்றுமே நம்மைப்போல் ஒன்றாய் வாழ
35. என்னில் நீயும், உன்னில் நானும்
இருப்பதுபோல் அவர் ஒன்றாய் வாழட்டும்.
(பக்தன் கூறினான்:)
36. தன்சித்தம் எதுவென்று நமக்கு உரைத்த
நம் நாதன் தந்தைக்கு நன்றி கோடி
37. ஏற்றசமயம் வந்த போது நம்மை
இணைத்தானே முக்தி ஈசனிலே
38. வானமும் வையமும் ஒன்றாக்கி நம்
நாதனுக்குள் வைத்தான் நன்மையாக.
பக்தர்குழாம் என்ற இருபதாம் அதிகாரம் இத்துடன் நிறைவுற்றது.
Leave a Reply