அதிகாரம் இருபத்து மூன்று
நிலைத்த ஆனந்தம்
(முக்தேசன் கூறினான்:
1. தொண்டு எனக்குச் செய்திடும் பக்தன்
தொடர்ந்து என்பின் வந்திடவேண்டும்
2. நானே தங்கும் ஆலயமாய் அவன்
மனதை எனக்கே தந்திட வேண்டும்
3. எனக்குத் தொண்டு செய்திடுவோனை
இறைவன் உயர்த்துவான் இதுவே நிச்சயம்.
(பக்தன் கூறினான்:)
4. உன்னதமான வரங்களினாலே
உயர்த்திய நமது ஆண்டவனை
5. வாழ்த்தி வணங்கிப் போற்றிடுவோம்
பாடிப் புகழ்ந்து வாழ்த்திடுவோம்!
6. உலகம் நமக்கு நிலையும் அல்ல,
செல்வோம் பரம வாழ்விற்கு
7. பக்தருக் கென்று இறைவன் அமைத்த
உன்னதமான பரமபதம்
8. நீதி என்றும் நிலை நிற்கும்
நிரந்தரமாய் அவன் நாட்டினிலே
9. நித்தம் மகிழ்ந்து வாழ்ந்திடுவோம்
அவன் புனிதமான உலகினிலே
10. படைத்த அனைத்தும் ஆவலுடன்
எதிர்பார்த்திருக்கும் அவன் வரவை
11. புதின மான ஓர்படைப்பாய் அவை
பொலிந்து ஒளிரும் அவன் நாட்டில்
12. அடிமைத்தனமும், அழிவும், இனிமேல்
அண்டா வண்ணம் நாம் வாழ
13. அனைத்து உயிர்களும் நம்முடனே
புனிதம் அடைந்து வாழ்ந்திருக்கும்.
(முக்தேசன் கூறினான்:)
14. எல்லாவற்றையும் புதிதாக்கி இனி
என்றும் என்னுடன் வாழவைப்பேன்.
(பக்தர்கள் கூறினார்கள்:)
15. ஊனும், உதிரமும் ஒருக்காலும்
அறிந்திடாது விண் வாழ்வதனை
16. அழிகின்ற எந்தப் படைப்பும் இனிமேல்
அடைந்திடாது உயர் வாழ்வதனை
17. மண்ணால் தோன்றிய முதல்மனுவின்
சாயலை நாமும் பெற்றாலும்
18. விண்ணில் இருந்து வந்தவனின்
விழுமிய சாயலை அடைந்திடுவோம்
19. மங்கிய தோற்றமாய் இங்கு விளங்கினும்
பூரண தரிசனம் கண்டிடுவோம்
20. அரைகுறையாய் அதை அறிந்தாலும்
முழுமையாய் இறுதியில் உணர்ந்திடுவோம்
21. நம்மை நன்கு அறிந்த நாதன்
நமக்கு என்றும் இருப்பதினால்
22. இறைவன் மக்களாய் இங்கு இருக்க
எவ்வித மகிமை அங்கடைவோம்
23. முகமுகமாக தரிசிக்க அங்கு
முழுதும் அவனைப் போலாவோம்
(முக்தேசன் கூறினான்:)
24. என்னுடன் என்றும் வாழும்படி நான்
உங்களை உடன்தான் அழைத்துச் செல்வேன்
(பக்தர்கள் கூறினார்கள்:)
25. பழுதே அடையாமல் நம்வாழ்வைப்
புனித மாக்குவான் நம் இறைவன்
26. தாழ்ந்து கீழே வீழ்ந்திடாமல்
தாங்குவான் நம்மைத் தம் தயவால்
27. இறைவனுக் கேற்கும் வெகுமதியாய்
அவன்முன் படைப்பான் நம் வாழ்வை
28. விண்ணில் வாழும் புனிதருடன்
நம்மையும் சேர்த்து வாழவைப்பான்
29. சொந்தம் ஆக்கியே நம் வாழ்வைத்
தந்தே அருள்வான் தன் நாட்டை
30. சூரியன், சந்திரன், தேவையில்லா
தெய்வ ஒளிதரும் அந்நாடு.
31. இரவுபகல் என இனிஇல்லா
என்றும் ஒளிரும் அவன்நாடு.
32. எல்லா இனத்தின் மாந்தருமே
இனிதே கூடும் அவன் நாடு.
33. தத்தம் கலையுடன் காவியத்தைக்
காணிக்கையாய் நாம் கொண்டுவர
34. எல்லா மாந்தரும் ஒன்றுகூடி
இறைவனைப் போற்றும் ஒருநாடு
35. கண்கள் அதுபோல் கண்டதில்லை
காதால் அதன் புகழ் கேட்டதில்லை
36. எண்ணம் கூட எண்ணியே பாரா
இணையில்லாத ஒரு நாட்டை
37. அன்பருக் கென்றே அவன் படைத்து
அளித்தான் அன்பாய் நமக்கென்று
(முக்தேசன் கூறினான்:)
38. உங்கள் முன்னம் வாழ்ந்து இருந்தோர்
எத்தனையோ முறை தவமே செய்தும்
39. கண்டும், கேட்டும் அறிந்திடாத அந்த
உன்னதமான மகிமைகளை நீங்கள்
40. கண்டும், கேட்டும் உணர்ந்து விட்ட
புண்ணியவான்கள் ஆகிவிட்டீர்.
41. இறைவன் பிள்ளையாய் ஆன பக்தர்
அவனின் வார்த்தையை நன்கு அறிவர்.
42. இறைவன் சித்தம் செய்பவர் கூட
அவனின் சித்தம் உணர்ந்து வாழ்வார்.
43. இறுதிவரை நான் துணையாய் இருப்பேன்
உறுதியாய் இதை நீர் உணர்ந்து கொள்வீர்.
44. என்றும் சாந்தி நிலவட்டும் இனி
நிறைவாய் உம் வாழ்நாள் முழுதும்.
(பக்தர்கள் கூறினார்கள்:)
45. தம்மிடம் இறைவன் கூறியவை
திண்ண மாக நிறைவேறும்
46. என்று நம்பியே வாழ்ந்திட்டோர்
புண்ணியம் கோடி செய்திட்டார்
47. இறைவன் வார்த்தையை நாம் கூற
ஏற்றுக் கொண்ட அனைவருமே
48. புண்ணியம் கோடி செய்தவராய்
புவியில் வாழ்வார் பக்தர்களாய்
49. மாந்தர் கூறும் மொழியல்ல,
நாங்கள் உரைத்த வார்ததைகளும்
50. இறைவன் அளித்த வார்த்தைகளை
அறிந்தே உரைத்தோம் நீர் வாழ.
51. முழுமுதற் கடவுளைப் போற்றிடுவோம்!
முக்தேசனை இனி வணங்கிடுவோம்!
52. கருணை வள்ளலின் அடிசேர்ந்து
உய்வுறுவோம் நாம் உலகினிலே!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!!
நிலைத்த ஆனந்தம் என்ற
இருபத்து மூன்றாம் அதிகாரம் இத்துடன் நிறைவுற்றது.]
Leave a Reply