BTS A

பாடல் A

1970-ன் ஆரம்பங்களில் நாங்கள் திருச்சியில் மலைக்கோட்டையில் வசித்துக் கொண்டிருந்தோம். அந்நாட்களில் ஒரே வீட்டில் இரண்டு, அதற்கு மேற்பட்ட குடித்தனங்கள் இருப்பதுண்டு. அப்படியாக எங்களுடன் குடிஇருந்தவர் ஓய்வுபெற்ற ஒரு அதிகாரி.  எங்கள் இரு குடித்தனங்களுக்கும் ஒரு பொதுவான கூடம் (ஹால்) இருக்கும். இந்நாட்களில் பெரிதாக கருதப்படும் ’தனிமை’ (privacy) அந்நாட்களில் அகிகமாக இருக்காது.  ஒருவர் வீட்டில் நடப்பது அடுத்தவருக்கு நன்கு தெரியும். எங்களுடன் வசித்தவர் ஒரு முருக பக்தர்.  அவருடைய மகள் வங்கியில் பணிபுரிந்து வந்தார். அவரும் அடிக்கடி பூஜையில் கலந்து கொண்டு நன்றாக பாடுவார். அப்பெரியவர், காலையில் குளித்தபின் ஒரு டம்பளர் பால் பருகியபின் 8.00 மணிக்கு பூஜை ஆரம்பித்தால் 11-மணிகு மேல் தான் முடியும். ஒரு முறை பூஜையின் போது அவருடைய மகள் அழகான ஒரு தமிழ்ப்பாடலை முருகன் மீது பாடினார். அதைக்கேட்டுக் கொண்டிருந்த நான், உடன் அப்பாடலின் இசையாலும், பொருளாலும் தூண்டப்பட்டு இப்பாடலை எழுதினேன்:

ஞானம்தான் அருள்வாயே

ஞானப்பழமே முருகா

அஞ்ஞானத்தை  நீக்கிடுவாய்

ஆறுமுக வேள்முருகா

மெய்ஞானம் தான்வேண்டும்

மேதியினில் புகழ்வேண்டும்

அஞ்ஞானம் நீக்கியென்னை

ஆட்கொள்ள வரவேண்டும்

விஞ்ஞானப் பாதையிலே

உலகு விரைந்து சென்றாலும்

உன் ஞானப்பார்வையன்றி

ஒருபொருளும் விளங்காது

தத்துவமும் பேசவில்லை

தர்க்கம்செய்ய வரவில்லை

தத்தளிக்கும் மனதினிலே

பக்தி மட்டும் வேண்டிநின்றேன்

முருகனுக்குப் பல பெயர்கள் உண்டு. அதில் ’ஞானப்பழம்’ என்பது மிகவும் அறிந்த ஒன்று. இதன் பின் உள்ள கதை அனைவரும் அறிந்ததே. தன் பெற்றோரிடமிருந்து போட்டியில் மாம்பழத்தைப் பெறமுடியாது முருகன் கோபித்துக் கொண்டு பழனி மலையில் ஆண்டியாக இருந்த போது அவனை சமாதானப்படுத்த அவனை ’ஞானப்பழம்’ என்று கூறினார் ஒளவையார். இதன் பிண்ணனியில் உள்ள கதையாவது: ஒரு நாள் ஓளவை மிகவும் பசியுடனும் களைப்புடனும் ஒரு நாவல் மரத்தடியில் நின்றபோது, அதன் கிளையில் அமர்ந்திருந்த இடைச்சிறுவனிடம், சில பழம் பறித்துத் தருமாறு கூற, அதற்கு அச்சிறுவன், ’சுட்ட பழம் வேண்டுமா; சுடாத பழம் வேண்டுமா’ என்று கேட்க, அவன் தன்னை கேலிசெய்கிறான் என்பதை உணர்ந்து, அவளும் ’சுட்ட பழம் தா’ எனக் கூற, அச்சிறுவன், மரக்கிளையை உலுக்கினான். அப்பொழுது நன்றாக பழுத்த பழங்கள் தரையில் வீழ்ந்து மண் ஒட்டிக் கொள்ள, ஓளவை, ஒரு பழத்தை எடுத்து மண்ணை ஊத, அச்சிறுவன், ’சிரித்துக் கொண்டே, ’என்ன மிகவும் சுடுகின்றதா’ என்று கேட்டு, தான் யார் என்பதை வெளிப்படுத்துகின்றான். தன் அறிவுச்செருக்கால் அகந்தையுடன் இருந்த ஓளவையை சரிப்பட்டுதவே முருகன் ஒரு இடைச்சிறுவனாக வந்து ஒளவைக்கு பாடம் புகட்டுகின்றான். இதை நினைவு கூர்ந்து ஒளவை முருகனை ’சுட்ட பழம் தந்து ஞானம் புகட்டிய ஞானப்பழமாகிய உனக்கு ஒரு மாம்பழம் ஒரு பொருட்டா’ என சமாதானப் படுத்துகின்றாள்  இப்படி பக்திப்பாடல்களில் காணப்படும் வார்த்தைகளுக்குப் பின் ஒரு சம்பவமும் ஒரு போதனையும் இருக்கும்.

ஆனால் இப்பாட்டில் நான் எந்த தனித் தத்துவமும் கூற எழுதவில்லை..  உண்மையை சொல்லப்போனால், முதல் எட்டு வரிகளுக்கும், பின் எட்டு வரிகளுக்கும் தொடர்பே இல்லை. இது என் பாடல்களில் அதிகம் காணப்படும். பல சமயம் ஒரு சொல், அல்லது ஒரு கருத்தால் தூண்டப்பட்டு பாடலை எழுத ஆரம்பித்து, பின் என் மனதில் வரும் வார்த்தைகள், மற்றும் எண்ணங்களுக்குத் தகுந்தாற்போல் பாடலை எழுதி முடிப்பேன். சில சமயம் ஒரே சீரான கருத்து பாடல் முழுதும் காணப்படும், பல சமயம் பல வித கருத்துக்கள் ஒரே பாடலில் வரும்.

முதலில் ’ஞானம்’ தருமாறு வேண்டிய நான், இருதியில் பக்தியில் முடித்துள்ளேன். ஆனால் என் பாடலில் காணப்படும் முரண்பாடை நியாயப்படுத்தும் விதமாக நான் ’பக்தியே ஞானத்தின் முதிர்வு’ என்று கூற முடியும். இப்படித்தான் பல பக்திப்பாடல்களுக்கு, பின்பு விளக்கம் அளித்தவர்கள் அவற்றில் ஒரேமாதிரியான சித்தாந்தக்கருத்தை காண்பதற்காக வேண்டி, தங்களின் எண்ணத்தை அப்பாடல்களின் வார்த்தைகள், வரிகளின் மீது திணித்து கூறுவது உண்டு. பல சமயம் பக்தியின் பரவசத்தால் எழுதப்படும் பாடல்களுக்கு, பின் வந்தவர்கள் அதை ஒரு சித்தாந்தத்தின் வரையரைக்குள் கொண்டுவருவதற்கு புதிய விளக்கங்களை தருவார்கள். பல சமயக்குரவர்கள், மற்றும் ஆசான்கள் தங்களின் பக்தியின் பரவசமிகுதியில் சில கருத்து முரண்பாடுகளுடன் எழுதிய பாடல்களுக்கு, அவரிகளின் சீடர்களும், அடியார்களும் தங்களின் சமய சித்தாந்தங்களுக்கு ஏற்ற வகையில் விளக்கங்கள் எழுதி உள்ளார்கள். என்னைப் பொருத்தவரை பரவசம் மிகுதியால், பக்தி, இயற்கை, காதல், வாழ்க்கை பற்றி எழுதப்படும் பாடல்களில் குறிப்பிட்ட சித்தாந்தங்களை தேடுவது சரியாக இருக்காது.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *