BTS B

பாடல் B

இப்பாடலில் சற்று சித்தாந்தம் காணப்படும்.  இப்பாட்டை நான் ஏன் எழுதினேன் என்று தெரியவில்ல. கால்லூரி நாட்களில், எல்லா குடும்பங்களிலும் உள்ளது போன்ற சில பிரச்சனைகள் இருந்தாலும், என் மாணவப்பருவம் நன்றாகவே சென்றது. ஆனால் ஒரு நாள் இப்பாடலின் முதல் அடி திடீரென என் மனதில் தோன்ற, உண்மையான உள்ளான போராட்டமோ, எந்த விதமான தத்துவ எண்ணமோ இல்லாமலே இப்பாடலை எழுதி முடித்தேன்.

பூண்கொங்கைஅன்னையே

போற்றுதும்நின்திருநாமம்

வீண்பிறவிஎடுத்தேனை

வினைநீக்கிஆள்வாயே

நான்என்வினைசெய்தேன்

நாயினும்இழிஇப்பிறவிக்கு

நான்ஒன்றும்அறிகிலேன்

நான்முகனேபழிக்குறியான்

எடுத்தபிறவிபோதும்

இனிப்பிறவிவேண்டிலேன்

தடுத்தென்னைக்காப்பாய்

தயாபரிநீசங்கரியே

இப்பாடலில் மனிதப்பிறவிக்கும், அதன் அவலங்களுக்கும் என் தனிப்பட்ட பாவத்தை காரணமாக்காமல், என் கருமத்தையும் (ஊழ்?), படைப்புக் கடவுளான நான்முகனையும் குறை கூறியுள்ளேன். அன்றாட வழக்கில் ’பாவம்’ என்ற சொல் பயன் படுத்தப்பட்டாலும், தத்துவ அளவிலும், சித்தாந்தத்திலும், ஒரு இந்து தன் ’கர்மத்தைக்’ குறித்தே அதிகம் கவலை கொள்வான். வரிகள் 5-6-ல் என் பிறவிக்கு என் கருமத்தை காரணமாக்கியபின், உடன் நான்முகனை அதற்கு காரணமாக்கி பழி கூறுகின்றேன். அதன் பின் இறைவி சங்கரியிடம் இனி பிறவி வேண்டாமல் காக்கும் படி வேண்டுகின்றேன். இப்படி என் கருமம், இறைவனின் படைப்பு மற்றும் கருணை போன்ற பல சித்தாந்தக்கருத்துக்கள் ஒன்றுக் கொன்று முரண்பட்டவையாக இருந்தாலும், ஒரே சமயத்தில் கையாளப்படுவது இந்து சமய சித்தாந்தத்தில் பொதுவான ஒன்று. ஒரே சமயத்தில் மாறு பட்ட சித்தாந்தங்களை ஏற்றுக் கொள்வதறகுக் காரணம், ஒரே மாதிரியான சித்தாந்தக் கொள்கை என்பது இந்து சமயத்தில் இல்லாத ஒன்று. பன்முகத் (pluralism) தன்மையும், சந்தர்பத்திற்கு (relativism) ஏற்ற சித்தாந்தமும் இந்து சமயத்தின் முக்கியமான அடையாளம். ஒரே குறிப்பிட்ட சித்தாந்தத்தையே ஒரு சாமான்ய இந்து தன் சமய அடிப்படை எண்ணமாகக் கொள்வது கிடையாது. ஒரு வேளை சைவ, வைஷ்ணவ சமயங்களில் தனிபட்ட சித்தாத்தங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு ஏற்கப்பட்டாலும், ஒரு சாமான்ய இந்து அவற்றை பற்றி எண்ணுவதில்லை. அந்தச் சூழ்நிலைக்கு எந்தக் கருத்து ஏற்புடையதாகவும், தேவையாகவும் இருக்கின்றதோ, அதை மட்டுமே அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்வது என்பது ஒரு சாமான்ய இந்துக்கு இயற்கையாகாமைந்த ஒன்று. வாழ்வின் ஒவ்வொரு நிலையையும், தான் கொண்ட சமய சிந்தாந்தத்தின் அடிப்படையிலேயே சிந்தித்து செயல் படுவது என்பது ஒரு சாமான்ய இந்துக்கு இல்லாத, தேவையில்லாத ஒன்றாகும். தனிப்பட்ட செயலை ஒப்புக்கொண்டாலும், பிற காரணங்களையும் தேடி அவற்றையும் தன் நிலைக்கு பொறுப்பாக்குவது வழக்கமான ஒன்று. அது காலமாக, கருமமாக ஏன் கடவுளாகக் கூட இருக்கலாம். இதைப் பற்றி துளசிதாசர் கூறும் போது: காலத்தின் மீது, கருமத்தின் மீதும், கடவுளின் மீதும் பொய்யான பழி கூறுகிறார்கள் (’காலஹி, கர்மஹி, ஈஸ்வர்பர் மித்யா தோஷ் லகாயே’) என கூறுகின்றார். ஆனால் இறைவனின் கருணை அனைத்தையும் மேற்கொண்டு ஒரு பக்தனை காக்கவல்லது என்பதில் ஒரு சாமான்ய இந்து ஆழ்ந்த நம்பிக்கையுடனே வாழ்கின்றான்.

ஆனால் இந்துக்கள் அல்லாத பிற சயமத்தினர் ஒரே மறை, ஒரே சித்தாந்தம், ஒரே சமயம், ஒரே கடவுள் என்று இருப்பதால் அவர்களின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு, காரிய காரணங்களுக்கு அவற்றின் குறிப்பிட்ட வரையரைக்குள்ளேயே விடை தேடும் அவசியம் ஏற்படுகின்றது. ஆனால் பிறர சமயத்தில் உள்ள சாமானியர்கள் தங்கள் அன்றாட வாழ்வின் பிறச்சனைகளுக்கு, செயல்களுக்கு ஒரு  சமய வரையரைக்குள் வைத்து மட்டுமே விடை தேட முயல்வது இல்லை. அவர்களும் ஒரு சாமானிய இந்து வைப்போன்றே தங்கள் சமய சித்தாந்த வரையரைக்கு அப்பாற்பட்டு தேடியும், செயல்படுத்தியும் வாழ்கின்றார்கள். முற்றிலுமாக தங்கள் சமய சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ளும் பிற சமயத்தினர் அவர்கள் சமத்திற்குள்ளேயே நிச்சயம் சிறு பகுதியாகவே இருப்பார்கள்.

ஆனால் இப்படி இந்து மத சமயக்கொள்கைகளையும், பிற சமயக் கொள்கைகளையும், அவற்றின் அடிப்படையில் என் தனிப்பட்ட முக்தேசனில் நான் கொண்டுள்ள பக்தியையும் விரிவாக கூற இங்கு சமயமும் இடமும் இல்லை. அதை வேறு ஒரு நூலில் கூற முற்பட்டுள்ளேன். ஆனால் அது இன்னும் முற்றுப் பெறாத நிலையிலேயே உள்ளது.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *