என் சிறுவயது முதலே பல பக்தி மறைகளை என் அன்றாட வழிபாட்டில் பயன் படுத்தி வந்தேன். மாணிக்கவாசகரின் திருவாசகம் என்னைக் கவர்ந்த ஒன்று. அன்றாட வழிபாட்டில் ’சிவபுராணத்தை’ முழுமையாக சொல்லித்தான் முடிப்பேன். இதுபோன்று, அபிராமி அந்தாதி, திவ்யப்பிரபந்தம், சித்தர் பாடல்கள், தேவாரத்தின் சில பகுதிகள், மற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்கள் (செளந்தர்ய லகரி, ஆனந்த லகரி) போன்றவற்றையும் பயன்படுத்தி வந்தேன். எனவே இயற்கையாகவே எனக்கு தமிழ்மீது மிகவும் பற்றும் ஆர்வமும் ஏற்பட்டது.
ஆனால் நான் முதன் முறையாக என் அம்மாவிற்காக அவரின் பஜனை மண்டலிக்காக அகிலாண்டேஸ்வரி பெயரில் இராகமாலிகையில் ’பாதாதி கேச வர்ணை’ எழுத்தித் தந்தேன். அதற்கு அந்த பஜனை மண்டலிக்குழுத்தலைவி இராகம் அமைத்து பயன்படுத்தினார்கள். இன்றும் என் அம்மா அதை பல இடங்களில் பாடுகின்றார். 2014-ஆம் ஆண்டு நவராத்திரிக்கு ஒரு வீட்டில் அழைத்தபோது அங்கேயும் அதைப்பாடினார்கள்.:
பாடல் C
அண்டமெல்லாம் பூத்து அகிலமெல்லாம் காக்கும்
அகிலாண்ட நாயகியே ஆதிபராசக்தியே
தண்டயணி பாதமதில் தண்டனிட்டு நான் பணிந்தேன்
திருக்கண்டன் இடப்பாகம் கலந்தவளே காத்தருள்வாய்! 1
(காப்பி அல்லது பூபாளம்)
அழகிய நின் பாதமதில் அணிசெய்யும் பொற்கொலுசும்
அகிலமெல்லாம் முழங்கும் மாணிக்கப் பரல் அழகும்
மகிடன் தலைமிதித்த திருக்காலின் காப்பழகும்
கண்ட என்னுள்ளம் களிக்கொண்டு கூத்தாடும் (குந்தள வராளி)2
சின்னஞ் சிறு மருங்கில் சாற்றிய மென்பட்டும்
சிற்றிடையின் மேல் ஓடும் முத்தான மேகலையும்
கொடி இடை அசைந்தாட குழைந்து வரும் நடையழகும்
கண்ட என்னுள்ளம் களிகொண்டு கூத்தாடும் (சிந்து பைரவி)3
ஆசையுடன் நான் சார்த்தும் அழகிய பொன்மாலைகளும்
அடியவர்கள் தான் அளிக்கும் அழகிய பூமாலைகளும்
வாசமுடன் உன் மார்பில் வலம்வரும் போதினிலே
ஓசையுடன் என்னுள்ளம் ஓங்கி நின் புகழ்பாடும் (ஆனந்த பைரவி)4
சங்கென்ன வெண்கழுத்தில் தான் ஒளிரும் சிறு தாலி
அகன்ற உன் தோளினிலே அணிசெய்யும் முத்தாரம்
நாற்றிசைக்கும் ஒளிசேர்க்கும் நவமணிமாலைகளும்
நான்கண்ட போதினிலே நயந்து என்னுள்ளம் பாடும் (அடானா)5
எற்பூ ஏசிய நாசியிலே எழில் கொஞ்சும் மூக்குத்தியும்
சின்னஞ்சிறு காதில் திகழ்கின்ற தாடகமும்
நெற்றியில் மிளிர்கின்ற வாசமிகு குங்குமமும்
கண்ட என்னிருவிழியும் களிகொண்டு கூத்தாடும் (காபி)6
நிலவெண்ண மிளிர்கின்ற நின்முகத் தாமரையும்
காதளவோடு தான்னோடும் கரிய புருவங்களும்
அடியார்க்கு அருள்கின்ற அழகிய திருக்கண்ணும்
கண்டு என்னுள்ளம் கனிந்து உனை நாடும் (பாகேஸ்வரி)7
கத்தியினும் கூர்மையான ஏற்றமிகு நாசியின் கீழ்
பவளத்தை இழைத்தாற்போல் இளங்குகின்ற பனிஉதடு
பளிங்குபோல் ஒளிரும் பல்வரிசை தான் கண்டு
பண்ணமைத்து என்நா உன்புகழ்தான் பாடும் (ஸஹானா)8
ஏற்ற மிகு சிரசினிலே ஒளிர்ந்திடும் மணிமகுடம்
இருதோளும் வழிந்தோடும் முகிலண்ண கருங்கூந்தல்
தேவி உன்திருமேனி முழுவடிவம் தான் கண்டு
உருகி உருகி என்னுள்ளம் உன்திருவடி நாடும் (சுருட்டி)9
பார்வதியே ஈஸ்வரியே பாற்கடலோன் சோதரியே
பக்தர்க்கு அருள் வழங்கும் பர்வத வர்த்தனியே
பக்தியுடன் உன் அழகை பாதாதி கேசம் வரை
பதம் அமைத்துப் பாடுவதும் தேவிநின் அருளன்றோ (மத்யமாவதி)10
1972, திருச்சி
’பாதாதி கேச வர்ணணை’ என்பது பக்தி இலக்கியத்தில் இயல்பான ஒன்று. பெரும்பாலும் இறைவியைப்பாற்றி இத்தகைய பாடல்கள் பாதத்தில் ஆரம்பித்து தலையில் முடியும். தெய்வ உருவங்களை அழகுற ஆபரணங்கள் மற்றும் பூ மாலைகள் கொண்டு அலங்கரிப்பதால், இத்தகைய பாதாதி கேச வர்ணை என்பது இறைவன்/இறைவியின் அங்கங்களை அழகிய சொற்களைக் கொண்டு வர்ணிப்பது என்பது எளிதாக இருக்கும். தமிழுக்கே உள்ள இயற்கையான செழுமை காரணமாக அழகிய வார்த்தைகள் கொண்டு அங்கங்களை வர்ணணை செய்வது எளிதான ஒன்று. தமிழ் சமய இலக்கியங்களில் இறைவியின் அங்கங்களை வர்ணித்து எழுதி இருப்பது பலருக்கு சற்று சங்கடமாக இருக்கும். ஆனால் இது ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்குப் பின் நம் நாட்டில் அவர்களின் கலாச்சாரத்தின் தாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட ஒன்று. இதை ஆங்கிலத்தில் ‘Puritanism of post-Victorian era’ என அழைப்பார்கள். ஆனால் தமிழ் இலக்கியத்தில், இன்னும் குறிப்பாக பக்தி இலக்கியத்தில் கூட ’காதலும், காமமும்’ வாழ்வில் இயற்கையாகக் கருதப்பட்டதால் அத்தகைய பாடல்களை கொச்சையாக யாரும் கருதியது இல்லை. ஆனால் பொதுவான இலக்கியத்தில் இத்தகைய பாடல்களை ஏற்றுக்கொள்பவர்கள், பக்தி இலக்கியத்தில் இத்தகைய பாடல்களை சற்று சங்கடத்துடனேயே பார்க்கின்றார்கள்1. இதைக்குறித்து பேராசிரியர் மதிலால்2 கூறுவது கவனிக்கத்தக்கது.
இந்து மதத்தின் கலாச்சார மற்றும் ஆன்மீக வரலாற்றில், காமத்தையும், உடல் இன்பத்தையும் ஒருவித குற்ற உணர்ச்சியோடும், ஆன்மீகத்திற்கு எதிரானதாகவும் கருதப்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக பக்தி இலக்கியங்களில் காணப்படும் காமம் சம்பந்தமான பகுதிகளில் மறைவான ஆன்மிக கருத்துக்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பிற்கால பக்தி இலக்கியங்களில் அவை முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளன.
ஆனால் தமிழ் பக்தி இலக்கியத்தில் இறைவனும் காதலிலும், காமக்களியாட்டத்தில் ஈடுபட்டுள்தைக் குறித்து எத்தகைய குற்ற உணர்ச்சியோடும் அணுகியது இல்லை. கோயில்களில் காணப்படும் தெய்வங்களின் சிற்பங்களே இதற்கு இன்றைய அளவும் சான்றாக உள்ளது. ஆனால் தற்காலங்களில் அமைக்கப்படும் எத்தகைய கோயில்களிலும் இத்தகைய சிற்பங்களுக்கு எள்ளளவும் இடம் கிடையாது.
ஆனால் நான் இந்த பாதாதி கேச வர்ணனையை எழுதியபோது, ’சிற்றிடை’ ’சங்கு போன்ற கழுத்து’ போன்ற வர்ணனைகளை பயன்படுத்தினாலும், மிக அதிகப்படியான அங்க வர்ணனைகளை தவிர்த்து உள்ளேன்.
இப்பாட்டில் அதிகமான சித்தாந்தம் காணவேண்டியதில்லை. இத்தகைய பாடல்கள் இறைவியை வர்ணிப்பதுடன் அவளின் கருணை, மற்றும் இரக்கத்தையும் கூறுகின்றன. அதேசமயம் சில புராணக்குறிப்புகளும் இடையிடையே காணப்படும். குறிப்பாக ’மஹிடன் தலைமிதித்த’ என்பதில் உள்ள புராணம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பல பக்திப்பாடல்களில் இத்தகைய புராணக் கதைகளையும் இணைத்து பாடுவது வழக்கமான ஒன்று. பெரும்பாலான இந்துக்களுக்கு அக்கதைகள் தெரிந்ததினால் அவை இயற்கையாக பாடல்களில் பயன்படுத்தப்படுகின்றன.
கடவுள்களின் மேனியில் அணிவிக்கப்படும் ஆபரணங்கள் தங்கத்தினால் செய்யப்பட்டு பலவித விலைமதிப்பற்ற மணிகள் பதிக்கப்பட்டாலும், அவை இறைவன் திருமேனியில் அலங்கரிப்பதனாலேயே அவற்றின் சிறப்பும், மேன்மையும் இன்னும் அதிகமாக உள்ளதாக பாடல்களில் கூறப்படும். மனிதர்களைப்போல் கடவுள்களுக்கும் இத்தகைய ஆபரண, அலங்காரங்கள் தேவையா என்ற எண்ணம் எந்த ஒரு இந்து மனதிலும் எழுவதே இல்லை. இறைவன் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே இருப்பதலால், ஒரு சாமானிய மனிதனுக்குத் தேவையான அனைத்தும் இறைவனுக்கும் அளிக்கப்படும். இதனால் பக்தி என்பது வெறும் தத்துவமாக (philosophy) சிந்தனைக்கு அப்பாற்பட்டதாக இல்லாமல், உலகவாழ்வின் ஒருபகுதியாகவே கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்றும் கூட வீடுகளில் இறைவனை விருந்தாளியாகப்பாவித்து உபசாரங்கள செய்வதும், கோயில்களில் அரசனாக பாவித்து ஒரு அரசனுக்குச் செய்யப்படும் அனைத்து மரியாதைகளும் செய்யப்படுவதும் வழக்கமான ஒன்று. வீடுகளில் முக்கிய விருந்தாளிகள் வரும்போது ஸோடச உபசாரம் எனப்படும் பதினாறு3 வகையான உபசாரங்கள் செய்யப்படவேண்டும். ஒருவேளை இக்காலத்தில் அவை அனைத்தும் அப்படியே செய்யப்படாவிட்டாலும், அவற்றைப்பற்றிய குறிப்புகளிலிருந்து அவை வெறும் கற்பனை என்று நாம் ஒதுக்கமுடியாது. தற்காலத்தில் பலருக்கும் அவைப்பற்றிய தவல் தெரியாததால் அவற்றை கீழே குறிப்பில் கொடுத்துள்ளேன். ஆனால் இக்குறிப்புகளும் அந்தணர்களின் வாழ்வோடு தொடர்புடையவை. எனவே இவை மற்ற சமுதாயத்தினர் பயன்படுத்தியதாக குறிப்போ, தேவையோ இல்லை. அவை: வரவேற்பு, ஆஸசம் தருதல், நீர் தருதல், பாதம் கழுவுதல், ஆச்சமனம் (வாய்கழுவுதல்), (எண்ணைக்)குளியல், ஆடையளித்தல், சந்தனம் தருதல், பூத்தருதல், தூபம் காட்டுதல், தீபம் காட்டுதல், உணவு அளித்தல், ஆரத்தி எடுத்தல், தாம்பூலம் அளித்தல், நமஸ்காரம் செய்தல், வழிஅனுப்புதல். ஆனால் இவற்றில் சில பிறகுறிப்புகளில் மாறுபடுகின்றன. இவை அனைத்தும் ஒரு விருந்தினருக்கு தற்காலத்தில் செய்யப்படாவிட்டாலும், இறைவனை வீட்டில் பூசிக்கும்போது இவற்றில் பல இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. என் அத்தை காலையில் எழுந்ததும் காப்பி போட்டபின் முதலில் ஒரு டம்பளர் காபிக்கு இறைவன் முன் வைத்தபின்னே குடிப்பார். அதுபோல் மதியம் ஒரு டம்பளர் தண்ணீர் வைப்பார்.
வீட்டில் இறைவனை ஒரு விருந்தாளியை உபசரிப்பதுபோல் இறைவனை கோயிலில் ஒரு அரசனைப்போல் உபசரிப்பார்கள். திருப்பள்ளி எழுச்சி, அபிஷேகம், அலங்காரம், மக்களுக்கு தரிசனம் தருதல், திருவீதி உலா, உற்சவம், கலை நிகழ்ச்சிகள் போன்று அரசனுக்குச் செய்யப்படும் உபசாரங்கள் செய்யப்படும். பண்டைய இலக்கியங்களில், அரண்மனையும் ’கோயில்’ என்று@ அழைக்கப்பட்டுள்ளது.
Notes
1.. இறைவியின் அங்க வர்ணனை என்பது ஏதோ முற்கால, இடைக்கால பக்தி இலக்கியங்களில் இருந்ததாக மட்டும் நாம் கருத முடியாது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த இராமலிங்க வள்ளளாரின் அருட்பாவிலும் பல பாடல்கள் பெண்களைப்பற்றியும், அவர்களின் அங்கங்களைப்பற்றியும் வெளிப்படையான சொற்களைக்கொண்டு பாடல்கள் எழுதி உள்ளார். பெரும்பாலும் தமிழ் இலக்கியங்களில் ஆண்களை பற்றி வர்ணிக்கும்போது அவர்களின் அகன்ற மார்பு, திண்மையான தோள், நீண்ட கைகளைப்பற்றியே கூறப்பட்டிருக்கும். ஆனால் பெண்களைப்பற்றி எழுதும்போது ஒவ்வொரு அவயங்களையும் தனிப்பட்ட முறையில் வர்ணித்து எழுதப்பட்டிருக்கும். இதற்கு ஒரு முக்கிய காரணம், பெரும்பாலான இலக்கியங்கள் ஆண்களால் எழுதப்பட்டதால் இருக்கலாம்.
அருட்பா: பாடல் 2, வரி 9, முதல் கொகுதி, ப. 69
பாடல் 106, வரி 1-2, முதற் கொகுதி, ப. 212
பாடல் 324, வரி 3-4, முதற்கொகுதி, ப. 471 (திருப்புகழ் 1203)
பாடல், 386, வரி. 1-4. முதற்கொகுதி, ப. 540
பாடல் 1806, நான்காம் கொகுதி , ப. 52, மிகவும் விவரமாக களவியைப்பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
பாடல் 2739, ஏழாம் தொகுதி, ப. 364
தேவாரம், ஞானசம்பந்தர், பதிகம், 3.120.5 (1294)
இத்தகைய குறிப்புகளும், பதிவுகளும் தருவரு ஏதோ நம் இந்து சமய நூல்களை குறைத்து மதிப்பிடுவதற்கோ, குறைகாணுவதற்கோ அல்ல.
இத்தகைய பதிவுகளை முக்திவேதத்திலும் காணமுடியும். குறிப்பாக உன்னதபாட்டில் இத்தகைய வர்ணனைகள் காணலாம். உ.ம். உன்னதப்பாட்டு, 7:1-9
2. ‘…The rather morbid idea that the desire of flesh is always to be frowned upon as something sinful and must be associated with the feeling of guilt is conspicuous by its absence in many epic tales. I do not wish to suggest that the cultural-religious history of Hinduism eventually did not catch up with the idea of guilt and sin when Hindus talked about sensual pleasure and its irreligious nature. Puritanical attitudes towards sex occasionally became dominant in the tradition, and (p.146) under this pressure there was a great drive to find allegorical and symbolic meanings for unabashed statements of sensuality in the religious context.@ There was a complete volte face in the latter Bhakti tradition of devotionalism. However, as far as the epic material is concerned, we do not note this attempt.’— The Collected Essays of Bimal Krishna Matilal: Ethics and Epics, ed. Jonardon Ganeri, New Delhi, Oxford, 2002, pp. 146-47
@ This fact is satirically point by Dongier regarding Kamasutra:
One reason why the Kamasutra plays almost no role at all in the sexual consciousness of contemporary Indians is that it is known, in both India and Europe, almost entirely though the flawed English translation by Sir Richard Francis Burton. This translation was published in 1883, a time when the Hindus, cowering under the scorn of the Protestant proselytizers, wanted to sweep the Kamasutra under the Upanishadic rug…..— Wendy Doniger, ‘FROM KAMA TO KARMA: THE RESURGENCE OF PURITANISM IN CONTEMPORARY INDIA’, in On Hinduism, New Delhi, Aleph Book Company, 2013, p. 400
…The sixteen types of service are:–invocation (Aavaahana); offering the seat (Aasana); water offering (Arghya); washing of the feet (Paadya); water for rinsing the mouth as a mystical rite (Aacamana); oil bath (Abhyanga snaana); (p.69) offering of cloth (Vastra); Scents (Gandha); flowers (Puspa); incense (Dhuupa) lamps (Dipa); food offering (Nivedana); waving of lights (Niiraajana); betel leves (Tambuula); obeisance (Namaskaara); and mystical discharge and conclusion (Visarjana).— ANCIENT INDIAN TRADITION & MYTHOLOGY; Translated by A board of Scholars, Edited by Prof. J.L.Shastri, Delhi; Mothilal Banarsidass Pub. Pvt. Ltd. (1970), 2002, The Siva Purana Four Volumes, Vidyesvarasamhitaa, 11:25-29, pp.69-70
09-10-2014
Leave a Reply