Bhakti Gita Chapter Eighteen

பதினெட்டம் அதிகாரம்

பரிபூரண யோகம்

(முக்தேசன் கூறினான்:)

1. பூரணமுள்ள இறைவனைப் போல

நீங்களும் முழுமை அடைந்திட வேண்டும்.

(பக்தர்கள் கூறினார்கள்:)

2. ஆரம்ப நிலையிலே நில்லாமல் நாம்

முழுமை நோக்கிச் செல்ல வேண்டும்.

3. இறைவனின் பூரணம் நம்முள் இருக்க

அவனில் நாமும் நிறைந்திட வேண்டும்.

4. தெய்வத்தன்மை அவன் மேனியில் விளங்க

தேவனால் நாம்முழு வாழ்வ டைந்தோம்.

5. உள்ளான மனிதனில் பெலனும்மடைய

அவனாவி நமக்குத் துணை புரியும்.

6. ஆண்டவன் நம்முள் பூரணமாய் நிற்க

இறையருள் நம்மிலே நிறைந்திடட்டும்.

7. ஆண்டவன் பார்வையில் நன்மை ஒன்றே

அனுதினம் நாம் செய்ய அருளிடுவான்.

8. நல்லதை நாமும் செய்திட இறைவன்

பெலனும் நிறையவே அருளட்டும்.

9. தூயமையும், தெய்வத்தன்மையும் விளங்க

தேவன் தருவான் தன் வல்லமையை.

10. ஆகையால் அனுதினம் நம்பியே முயல்வோம்

நன்மையும் நம்மில் நிறைவாக.

11. நல்லொழுக் கத்துடன் ஞானம் கூட

ஞானத்துடன் சுய அடக்கமும், சேர

12. அடக்கமும் நிச்சயம் நிறைந்தே நிற்க

நிச்சயமுள்ள தெய்விகம் திகழ

13. தெய்வீகத்துடன் சோதரம் சிறக்க

சோதர அன்புடன் வாழ்வும் விளங்க

14. அனுதினம் வாழ்வில் அருளட்டும்

தெய்வமே நிறைவாய் அளிக்கட்டும்.

(முனிவர் கூறினார்:)

15. பூரணம் அடைந்தேன் என்றே எண்ணாமல்

பொறுமையாய் முயல்கிறேன் அதை அடைய

16. ஐயனின் சொந்தமாய் ஆனதினால் அந்த

நிலையை அடைய முயலு கிறேன்.

17. உன்னத நிலைக்கு என்னை அழைத்து

உயர்ந்த இலக்கு ஒன்று வைத்ததனால்.

18. பழையன மறந்து முன்னே நோக்கிப்

பொறுமையாய்த் தொடர்கிறேன் பரிசடைய.

(பக்தர்கள் கூறினார்கள்:)

19. உண்மை, ஒழுக்கம், கீர்த்தி, புண்ணியம்,

புகழுடன் கூடிய நன்மைகளை

20. இன்னும் பலப்பல மேன்மைகளை நாம்

என்றும் எண்ணியே வாழ்ந்திடுவோம்.

21. கனிவு, இரக்கம், தாழ்மை, பொறுமை,

அன்பு, பணிவு, போன்ற  பல

22. போற்றும் இன்னும் நல்ல குணங்களைப்

பூரணமாக  அணிந்திடுவோம்.

23. ஆவியின் உன்னத நன்மைகளை

ஆண்டவன் நமக்கு அளித்திருக்க

24. மேன்மையான எண்ணங்களை நாம்

மேலும் தொடர்ந்து நாடிடுவோம்.

25. ஐயனே, அப்பனே, ஆண்டவனே,

உன் அடியார் விருப்பம் இல்லாமல்

26. உன்னத சித்தம் ஒன்று மட்டும்

உலகில் பூரணம் அடையட்டும்.

(முனிவர் கூறினார்:)

27. தன் அடியார்கள் நன்மையில் நிலைக்கத்

தந்தான் ஆண்டவன் வேதங்களை.

28. இறைவன் சித்தத்தில் நிலைத்திருக்க

இன்னும் முதிர்ச்சி அடையுங்கள்.

29. அழைத்தவன் தந்த பணிகளையே

அவசியம் நீங்கள் முடித்திடுங்கள்.

30. ஒன்றிலும் நீங்கள் குறைவு படாமல்

உறுதியாய் நின்று முழுமை பெற

31. அழைத்தவன் கருணையில் நிலைநின்று

ஐயனில் பூரண மாகிடுங்கள்.

32. சில, சில துன்பம் சீக்கிரம் நீங்கி

அவனின் கிருபையும் நம்மையும் மீட்டு

33. ஆண்டவனில் என்றும் நிலைநிறுத்தும்

ஐயனில் நம்மைப் பெலப்படுத்தும்.

34. எல்லாம் கடந்து இறைவன் அளிக்கும்

அமைதி காக்கும் நம் இதயங்களை.

35. தொடங்கிய நல்ல பணிகளைக்கூட

தொடர்ந்து அவனே முடித்து வைப்பான்.

36. சிறிய பிள்ளையைப் போல எண்ணிச்

செயல்பட்டோம் பிள்ளைப் பருவத்திலே

37. பிள்ளைத் தன்மை நீக்கினோம் நாமும்

பூரண மனிதராய் ஆனபோது.

38. குறைகளும் நீங்கும் நம்மில்கூட

நிறைவுகள் நம்மை நாடும்போது.

39. அன்பு, நம்பிக்கை, விசுவாசம்,

ஆகிய மூன்றும் நிலைத்தாலும்

40. பூரண அன்பு ஒன்றே என்றும்

முதன்மையாகி நிலைத்திருக்கும்.

பூரண யோகம் என்ற பதினெட்டாம் அதிகாரம்

இத்துடன் நிறைவுற்றது.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *