Bhakti Gita Chapter Five

அதிகாரம் ஐந்து

ஆன்மீக ஐக்கிய யோகம்

(ஆண்டவன் கூறினான்:)

1. மனக்கதவை நீ திறந்தால்

நிச்சயம் வருவேன் உனக்குள்ளே.

2. என் போதனைகளைக் கைக்கொண்டால்

என்னருள் இருக்கும் உன்னுடனே.

3. குற்ற மில்லாப் பக்தனுமே

குருவின் போதனை கைக்கொள்வான்.

4. இறைவன் கட்டளை ஏற்பவனும்

என்றும் அவனில் நிலைத்திருப்பான்.

5. என்னில் நீயும் இணைந்திருக்க

எளிதாய் உலகை வென்றிடுவாய்.

6. என் அன்பைத்தான் நீ மறுக்க

எளிதில் மறையும் உன் பக்தி

(முனிவர் கூறினார்:)

7. இறைவன் இருப்பிடம் அன்பென்று

அறிந்து அன்பில் நிலைப்பவனும்

8. இறைவன் தன்னில் நிலைத்திருப்பான்

இறைவனும் அவனுடன் இணைந்து இருப்பான்.

9. இறைவன் சொற்படி நடப்பவனே

இறைவன் தன்னில் நிலை நிற்பான்.

10. அவனைப் போன்ற பக்தனுடன்

ஆண்டவன் அனுதினம் வாழ்ந்திருப்பான்.

11. பூரணமாகிடும் அன்பு நம்மில்

இறைவன் சொற்படி வாழ்ந்து விட.

12. இறைவன் தன்னில் நிலைநிற்பேன்

என்றே உள்ளம் உரைத்தாலும்

13. அதன்படி நடந்திடும் பக்தனுமே

அவனுடன் ஒன்றாய் வாழ்ந்திருப்பான்.

(பக்தன் கூறினான்:)

14. இரக்கத்தால் இறைவன் எனை அழைத்தான்

முக்தேசனில் கடவுளைக்  கண்டறிய

15. அழைத்த அவனை அறிந்ததினால்

துறந்தேன் மற்றவை குப்பை என்றே.

16. வாழ்வதும் இனி இத்தேகமதில்

இன்னுயிர் தந்த இறைவனுக்கே.

17. அவன் மேன்மை என்னில் உயர்ந்திடவே

அடிமை சிறுமை அடைந்திடுவேன்.

18. வாழ்வது இனியும் நானல்ல

முக்தேசனே என்னில் வாழ்கின்றான்.

19. இனி நான் வாழ்வது அவனுக்கே

மரித்தாலும் அது என் முக்திக்கே.

20. பக்தியால் அவனுடன் இணைந்ததினால்

ஆவியில் அவனுடன் ஒன்றானேன்.

21. அனுதின வாழ்வில் இறையருளால்

அவனுடன் நிலைத்து வாழ்ந்திருப்பேன்.

22. அவனது சாயலின் நிழலாக

அவனியில் நாமும் வாழ்கின்றோம்.

23. பக்தியின் உன்னத நிலை எய்திப்

பூரண சாயலாய் மாறிடுவோம்.

24. ஆன்ம உருவாய் அவனிருக்க இவை

அனைத்தும் நம்மில் நிறைவேறும்.

(ஐயன் கூறினான்:)

25. கொடியாம் என்னில் நீ இருந்தால்

கிளையாய் நிச்சயம் பலன் தருவாய்.

26. தாகம் நீக்கும் நீராவேன்

நாடி என்னிடம் வருபவர்க்கு.

27. இந்தத் தீர்த்தம் பருகியவன்

புண்ணிய நதியாய்ப் பெருகிடுவான் .

(முனிவர் கூறினார்:)

28. ஆண்டவன் தங்கிடும் ஆலயமே

நாமென்றே நன்கு அறிந்திடுவோம்.

29. புனிதமான ஒரு கோயில்போல

பொலிவோம் இனிமேல் நாம் அவனுக்கே.

30. இறைவன் தங்கும் இல்லமதைத்

தூய்மையாய் வைப்பது நம் கடமை.

31. தேகமென்னும் நம் கோயிலிலே

சன்னதி கொண்டவன் நம் இறைவன்.

32. நாதன் தங்கும் கோயிலிது இனி

நமக்கு என்றும் சொந்தமல்ல.

33. அன்பு, அமைதி, கருணையுடன்

உண்மை, தூய்மை, உயர்வுடனும்,

34. பொறுமை, கனிவு, பணிவுடனே.

போற்றும் மற்ற குணங்களினால்

35. அனுதினம் அர்ச்சனை செய்திருந்து

வழிபடுவோம் நாம் இறைவனையே.

(ஆண்டவன் கூறினான்:)

36. எந்நேரம் என்ன பேசுவது

என்று ஐயம் கொள்ளவேண்டாம்.

37. ஏற்ற வார்த்தை நான் தருவேன்

தெளிவாய் நீயும் கூறிடவே.

38. சொல்வது இனியும் நீயுமல்ல

பேசுவேன் உன்னில் நானிருந்து.

39. உண்மை வழியில் நீ நடக்க

உறுதுணையாகும் எனதான்மா.*

*ஆவி

40. ஒன்றாய் என்னுடன் இணைந்திருக்க

உணர்வாய் இதைநீ வாழ்வினிலே.

[இத்துடன் ஆன்மீக ஐக்கியயோகம் என்ற

ஐந்தாம் அதிகாரம் நிறைவுற்றது]

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *