பக்தி கீதை
முதலாம் அதிகாரம்
(இறைவனின் காட்சி)
1. மங்கள ஓசை பொங்கி எழ
இறைவன் வாக்கும் வந்ததுவே
2. இனிய ஏழு தீபமிடை
எழுந்தான் மனித உருவில் அவன்,
3. தங்கக் கவசம் தரித்தவனாய்
தரிசனம் தந்தான் எனக்கவனே,
4. அக்கினி போன்ற கண்களுடன்
வெண்கலம் போன்ற பாதமுடன்,
5. உன்னதமான குரலுடனே
காட்சியும் தந்தான் கண்குளிர.
6. ஏழு தாரகை கையேந்தி
இருளை நீக்கும் கதிரவனாய்
7. என்முன் தோன்றிக் காட்சி தர
மூர்ச்சையாகி நான் வீழ்ந்தேன்.
8. அபயம் அளித்து எனை யெடுத்து
’அஞ்சேல்’ என்று அரவணைத்தான்
9. ’ஆதியும், அந்தமும் ஆகிநின்றேன்
புனிதமும், நீதியும் ஆகி வந்தேன்
10. மூடுவேன், திறப்பேன் முக்திவழி
எதிர்ப்பவர் யார் என்னையினி’
11. என்றுரைத்தே எதிர் நின்றவனின்
இணையடி பணிந்து நானும் நின்றேன்.
(உடன் தேவகணங்கள்
மங்கள வாழ்த்துக்கள் எழுப்பின)
12. என்றும் வாழும் பரம்பொருளே,
எல்லாம் வல்ல இறைவன் நீ!
13. புண்ணியம் நீ, புகழும் நீ,
என்றும் உள்ள புனிதன் நீ,
14. ஆதியும், அந்தமும், நடுவும் நீ,
அனைத்தையும் காக்கும் தெய்வமும் நீ,
15. போற்றத் தகுந்த நாயகனே
புகழும், பெருமையும், பெலமும் நீ,
16. படைத்தாய் உலகில் அனைத்தையுமே
பரனே உன் திரு ஞானமதால்,
17. காக்கின்றாய் நீ அனைத்தையுமே
கருணையே உன் பர சித்தமதால்,
18. பூரண அண்டமும் உன் படைப்பால்
புண்ணிய உலகாய் ஆனதுவே,
19. புவியை ஆள்வாய் நீ என்றும்
முடிவே இல்லா காலம் வரை!
20. உன்னருள் செயல்கள் ஒவ்வொன்றும்
உயர்வே ஆனது என்றென்றும்,
21. நீதியின் வழியே உந்தன் வழி
நித்தமும் உள்ள உண்மை வழி,
22. போற்றார் யாரும் புவியில் உண்டோ
புண்ணியா! உன் திரு நாமமதை,
23. புனிதன் ஒருவன் நீயுமன்றோ;
புகழார் யார் உன் இறையாண்மையை?.
(ஒரு பக்தன் கூறினான்)
24. இறைவன் மகிமையைவெளிப்படுத்த
இவனே வந்தான் பூரணமாய்.
25. காணமுடியா இறைவனையே
காட்டவந்தான் தன் மேனிதனில்.
26. மாந்தர் முக்தி அடைந்திடவே
மாறாக் கருணை அவன் தந்தான்.
27. தேகம் தன்னில் தேவன் தோன்ற
தெய்வ ரகசியம் நாமறிந்தோம்.
(அப்போது முனிவர் கூறினார்)
28. நித்திய வார்த்தை மனிதனாகி
நேயமாய் நம்மிடை வந்தது
29. அருளும், சத்தியமும் அவனில்
ஒன்றாய் நிலை நின்றது
30. உண்மை வழி அவனாகி
உலகை உய்க்க வந்தவனாம்
31. ஜீவனளித்து நம்மையுமே
காத்து அருளினைத் தந்தவனாம்
32. ஞானம் அளிக்கும் குருவாக
நம்மை நாடி வந்தவனாம்
33. கண்டோம் அவனின் தரிசனமே
கூறவந்தோம் அதை உம்மிடமே.
(பக்தர்கள் பாடினார்கள்)
34. ஒலியே வடிவெடுத்து
ஓரருள் வார்த்தையாகி
35. உலகினை உய்விக்கவே
உருவெடுத்து வந்தோய்–போற்றி!
36. ஆதியில் தேவனாகி
அவனரும் புதல்வனாகி
37. அனைத்தையும் படைத்தெடுத்து
அவனியில் வந்தோய்–போற்றி
38. சிந்தைசொல் தான் கடந்து
ஜோதியே வடிவமாகி
39. ஜீவனின் ஊற்றுமாகி
திகழ்கின்றே அருளே–போற்றி
40. அருளுக்கு அருளாய் நின்றோய்
அவனிக்கு ஒளியாய் வந்தோய்
41. இருளிலே ஒளியும் தந்தோய்
முக்தேசனே போற்றி! போற்றி!!
[இத்துடன் ஆன்மீக ஒளியின் தரிசனம்
என்ற முதலாம் அதிகாரம் நிறைவுற்றது.]
Audio music also was posted in the New blog.
Leave a Reply