ஏழாம் அதிகாரம்
கர்ம யோகம்
(முனிவர் கூறினார்:)
1. பக்தன் என்று சொல்லிடுவோனும்
செயலில் பக்தியைக் காட்டிடவேண்டும்.
2. உயிரில்லாத உடம்பது போலது
செயலில் காட்டா பக்தியுமாகும்.
3. பக்தி உயரும் செயலில் காட்ட
உறுதியாகும் அன்புடன் கூட்ட.
(பக்தர் கூறினர்:)
4. நல்ல செயல்களைச் செய்திடவே
பக்தியைத் தந்தான் இறைவனுமே.
5. அவனுக்கு உகந்து நாம் நடந்து
அவன் பணியினையும் செய்திடுவோம்.
(ஆண்டவன் கூறினான்:)
6. அளித்தேன் உனக்கு நானருளே
சேவை பிறர்க்குச் செய்திடவே.
(பக்தர்கள் கூறினார்கள்:)
7. நாம் செய்யும் பணிகள் எல்லாம்
நாதன் அளித்த ஈவுகளே.
8. இறைவன் அருளும் இல்லாமல்
நன்மை செய்திட முடிந்திடுமா?
(ஆண்டவன் கூறினான்:)
9. கிருபை அதிகம் பெற்றவனும்
செயலில் அதையும் காட்டிடவேண்டும்.
10. கொஞ்சத்தில் உண்மையாய் இருப்பவனும்
அனைத்திலும் உண்மையாய் இருந்திடுவான்.
11. நாட்டமுடன் இரு நன்மைசெய்ய
ஆர்வமுடன் செய் என்பணியை.
12. எனது பக்தன் எப்போதும்
சிறந்து நிற்பான் நற்செயலில்.
13. கனிதரா மரமோ வெட்டப்படும்
செயலற்ற பக்தியும் அழிந்துவிடும்.
14. கிளையைக் கழிப்பார் செடிசெழிக்க
உன்னைக் கண்டிப்பேன் செயல்சிறக்க.
15. முறிந்த கிளையும் காய்வதுபோல்
பக்தி அன்றிச் செயல் மறையும்.
16. என்னில் நிலைப்பவன் செயல்படுவான்
என்னை மறுப்பவன் அழிந்திடுவான்.
(பக்தன் கூறினான்:)
17. என்பெலன் கொண்டு நன்மைசெய்ய
என்னால் முடியும் என்றில்லாமல்
18. என்னை ஆட்கொண்ட என்தலைவன்
தன்பெலன் கொண்டு செயல்படவே
19. இறையருள் தேவை சேவைசெய்ய
அதை இறைவனே தந்தான் நலம்புரிய.
20. தேக பெலத்தை நம்பிடாமல்
தேவனைச் சார்ந்து பணிசெய்வேன்.
21. சேவை செய்யும் எண்ணம் கூட
தேவனே தந்தான் என்மனதில்.
22. ஆட்கொண்ட இறைவனும் என்மூலம்
அவன்பெலன் கொண்டு செய்கின்றான்.
23. என்பங்காய் நானும் செய்வதெல்லாம்
இணங்கினேன் இறைவன் செயல்படவே.
24. எல்லாச் செயல்களும் செய்திடவே
எனக்கும் அருளினான் தன்கிருபை.
25. எனக்குப் பெலன்தரும் அவன்மூலம்
எல்லாம் செய்யப் பெலன்பெறுவேன்.
(ஆண்டவன் கூறினான்:)
26. என்னருள் ஒன்றே போதுமெப்போதும்
உன்னில் கிருபை நிறைந்திடவே.
(பக்தன் கூறினான்:)
27. உன்னருள் என்னில் முழுமையாய் இருக்க
என்குறை கண்டு நான் அஞ்சமாட்டேன்.
28. இறைவன் அருளை நானும் பெற்றதால்
அவனுடன் பணிசெய்யும் நலம்பெற்றேன்.
29. சிந்தை, எண்ணம் எல்லாம்மீறி உன்
சித்தம் ஒன்றையே நான் செய்ய
30. உள் மனதினிலே வல்லமைதந்திடு
அருளை எனக்கு நிறைவாய் அளித்திடு.
31. அதனை அறிந்திடும் ஞானமும் தந்து
சேவை செய்திட அருளைத் தந்திடு.
(ஆண்டவன் கூறினான்:)
32. சேவை அனைத்தையும் முடித்த பின்னே
’என் கடன் பணிசெய்து இருப்பதொன்றே’
33. என்பதை உணர்ந்து என்னருளாலே
எல்லாம் செய்தாய் என்பதைக் கூறு.
(முனிவர் கூறினார்:)
34. மனிதர் மெச்ச விருப்பம் கொள்ளாமல்
இறைவனுக்கென்று எல்லாம்செய்வாய்.
35. சொல்லால் செயலால் செய்வது எல்லாம்
ஆண்டவன் பெயரால் அனுதினம் செய்வாய்.
36. எதை உண்டாலும், எதை உடுத்தாலும்
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
37. முழுதும் இறைவன் அடிமை என்று
முழுமனதுடன் நீ சேவை செய்திடு.
38. பலனைத்தருவது அவனென்று அறிந்தே
ஊக்கமுடன் பல சேவைகள் செய்திடு.
(ஆண்டவன் கூறினான்:)
39. எத்தனை சிறிதே ஆயினும் சேவை
பலனும் அதற்கு என்னிடம் உண்டு.
40. எளியவர் என்று எவரையும் இகழாமல்
சேவை செய் அனைவர்க்கும் பணிவுடனே
41. எனதடியான் என உன்னைநீ எண்ணினால்
இத்தகைய எண்ணம் நிச்சயம் வேண்டும்.
42. பசியாய் இருந்தேன் உணவும் அளித்தாய்,
தாகமாய் இருந்தேன் நன்நீர் தந்தாய்,
43. அனாதையாய் இருந்தேன் அன்புடன் ஏற்றாய்,
ஆதரவிழந்தேன் அணைத்துமே காத்தாய்,
44. ஆடையிழந்தேன் உடையை அளித்தாய்
நோய்க்கொண்டபோது மருந்தும் தந்தாய்,
45. அடக்கப் பட்டேன் குரலும் கொடுத்தாய்,
அநியாயம் கண்டே துணிந்தே எதிர்த்தாய்.
(பக்தர்கள் கேட்டனர்:)
46. இத்தனை சேவை உனக்கும் செய்ய
என்று பெற்றோம் உயர் புண்ணியமே?
47. இந்த நிலையில் என்றுமே உன்னை
ஐயனே நாங்களும் கண்டதே இல்லை!
(ஆண்டவன் கூறினான்:)
48. மக்கள் சேவையே மகேசன் சேவை
மறந்துவிடாதே இதைநீ என்றும்.
49. பரனுக்களிக்கும் பொருட்கள் எதுவும்
பாமரரை என்றும் சென்றடையாது.
50. எளியோர்க்களிக்கும் சேவைகள் அனைத்தும்
இறைவன் சேவையே இவ்வுலகினிலே.
51. தேவை நிறைந்த மாந்தர்தேடி
நீங்கள் செய்திடும் சேவையெல்லாம்
52. தெய்வத்திற்குச் செய்யும் சேவை என்று
தெளிவாய் உணர்த்தினேன் நானும் இன்று.
(ஒரு பக்தன் கூறினான்:)
53. ஒரு குவளை நீர் கொடுக்க
ஒரு வாய்ப்பே கிடைத்தாலும்
54. உலகில் வாழ்ந்த வாழ்க்கையுமே
வீணில்லை என்பேனே.
55. ஒருதுளி கண்ணீர் தான் துடைக்க
ஒரு முறைதான் முயன்றாலும்
56. உலகில் வாழ்ந்த வாழ்க்கையுமே
வீணில்லை என்பேனே.
57. ஓரு மனிதன் துயரத்திலே
சற்றேனும் பங்கெடுத்தால்
58. உலகில் வாழ்ந்த வாழ்க்கையுமே
வீணில்லை என்பேனே.
59. துயருற்ற இதயத்தைத்
துயர் நீக்கிச் சீர்செய்தால்
60. உலகில் வாழ்ந்த வாழ்க்கையுமே
வீணில்லை என்பேனே.
61. வந்த வண்ணம் போகின்ற
நிலையில்லா வாழ்க்கையிலே
62. சேவை செய்யச் சந்தர்ப்பம்
சற்றேனும் பெற்றுவிட்டால்
63. உலகில் வாழ்ந்த வாழ்க்கையுமே
வீணில்லை என்பேனே.
64. பரமனுக்கே சேவை செய்யும்
பாக்கியமாக அதை எண்ணி
65. பக்தியுடன் சேவை செய்வேன்
பரமன் புகழும் ஓங்கிடவே.
(முனிவர் கூறினார்:)
66. மன்னுயிர்காக்கத் தன்னுயிர் அளித்த
தெய்வம் அவன்போல் சேவைசெய்வோம்.
67. நம்சுகம் வெறுத்துப் பிறர்நலம் எண்ணி
நாளும் அவன்போல் சேவை செய்வோம்.
68. இறைவனின் அடியார் என்பதை உணர்ந்து
என்றும் அவன்போல் சேவை செய்வோம்.
69. சேவை நித்தம் செய்வதின் மூலம்
இறையடி யாராய் வாழ்ந்திடுவோம்.
[கர்மயோகம் என்ற ஏழாம் அதிகாரம்
இத்துடன் நிறைவுற்றது.]
Leave a Reply