Bhakti Gita Chapter Six

ஆறாம் அதிகாரம்

அன்பு யோகம்.

(இறைவன் முக்தேசன் கூறினான்:)

1. நிலை கொண்டிடுவாய்

நான் கொண்ட அன்பிலே

2. உலகோர் அதனை உணர்ந்திடவே

வாழ்ந்திடுவாய் நீயும் அன்புடனே.

(பக்தன் கூறினான்:)

3. இறைவனின் அன்பை என்வாழ்வில்

முக்தேசன் மூலம் நானறிந்தேன்.

4. உண்மை அன்பு இதுவென அறிந்தேன்

ஐயன் மூலமே அதை நான் உணர்ந்தேன்.

(ஆண்டவன் கூறினான்:)

5. என் அன்பை நீங்கள் அறிந்தபடி

என் கட்டளையைக் கைக்கொள்வீர்.

6. அதுஒன்றே அன்பில் நிலைநிற்க

அடியவர் செய்யும் பயிற்சியாகும்.

7. உங்களைநான் நேசிப்பது போல்

ஒருவரிலொருவர் அன்புடன் இருங்கள்.

8. இதுவே நான்தரும் ஞானபோதகம்

என்றும் அருளும் உயர்குரு மந்திரம்.

9. உலகினைக்காக்க எண்ணம் கொண்டு

அவதரித்தே வந்தேன் அன்புகொண்டு.

(முனிவர் கூறினார்:)

10. அன்பினைக்குறித்த உண்மை ஞானம்

இறைவனின் மூலமே நாம் அறிந்தோம்.

11. அவனைப்போலவே நாமும் பிறர்க்காய்

உயிரையும் அளிக்க முன் வரவேண்டும்.

12. இறைவன் அன்பு இவ்விதம் இருக்க

அதன்படி பிறரை நேசிக்கவேண்டும்.

13. ஆண்டவன் அன்பு நம்மையும் நடத்த

அதை நிறைவேற்ற நம்மால் முடியும்.

14. அன்பின் வழியது என்றும் உயர்நிலை

அதுவே அவன்தரும் உன்னத ஞானம்.

15. அன்பின் நிறைவாய் ஐயனுமிருக்க

பக்தரும் அவ்விதம் அனுதினம் நடக்க.

16. அவ்வுயர் ஞானத்தை அறியாவரையில்

அடையார் அன்பின் உன்னத நிலையை.

17. அன்பின் சொரூபி இறைவனே என்போம்

அவன்போல் பிறரிடம் அன்புடன் இருப்போம்.

(பக்தர்கள் கூறினர்:)

18. ஐயன் அளித்த ஆவியின் மூலம்

அவனது அன்பை நாம் அறிந்தோம்.

19. ஒருவரில் ஒருவர் நேசம் கொண்டு

அன்பை முழுமை ஆக்கிடுவோம்.

20. இந்த அன்பு நம்மில் விளங்க

எத்தகையோரும் இறைவனை அறிவார்.

21. காரியம் மூலம் காட்டா அன்பு

என்புதோல் மட்டும் போர்த்திய உடம்பு.

22. ஊரின் நடுவின் ஊறுணி போல

செல்வம் பிறர்க்காய்ப் பயன்பட வேண்டும்.

23. தேவை நிறைந்த எளியோர்களுக்கே

செல்வம் என்றும் பயன் படவேண்டும்.

24. பிறரின் தேவையை உணர்ந்தபின்னும்

கையைக் குறுக்கிக் கருமியாய் இருப்போர்

25. இறைவனின் அன்பை அறியாதவரே

இந்த உண்மை புரியாதவரே.

26. சுமைதாங்கிபோல் அனைத்தையும் தாங்கும்

உயர்ந்த தன்மை அன்பிற்கு உண்டு.

27. பிறர் பிழைகண்டு வெகுண்டுவிடாமல்

அவரின் தவறை மன்னிக்க வேண்டும்.

28. தீமை மனதிலும் பிறர்க்கு எண்ணாமை

பேரன்பின் உயர் உன்னதத் தன்மை.

29. இந்த உன்னத குணம் கொண்டோரே

இறவனின் உண்மைத் தொண்டருமாவார்.

(ஆண்டவன் கூறினான்:)

30. தன்னிடம் நேசம் கொள்பவரிடமே

அன்பை அளிப்பது உயர்வே அல்ல.

31. மறுபலன் எதையும் எதிர் பாராமல்

நேசிப்பதென்பதே உண்மை அன்பு.

32. தீங்கு செய்தோரிடம் அன்புகொள்ளாதவர்

அறிந்திடார் இறைவன் அளித்த அன்பை.

33. பேதமில்லாமல் நேசிக்கும் இறைவனின்

உண்மைத் தொண்டர் அவரும் ஆகார்.

(முனிவர் கூறினார்:)

34. பேதமில்லாமல் அன்பை அளித்து

அன்பின் கயிற்றால் உன்னையும்கட்டு.

35. இயன்றமட்டும்நீ அனைவ ரோடும்

ஒன்றாய் வாழ்ந்திட அறிந்திட வேண்டும்.

36. உன்னை நீயே நேசிப் பதுபோல்

பிறரையும் நேசித்து இறைவழிநடந்து

37. ஒருவர் பாரத்தை ஒருவர் தாங்கி

அன்பின் தொண்டனாய் என்றும் வாழ்ந்திடு.

38. பொறுமையும், கனிவும் அன்பிற்கு உண்டு,

பெருமைப்படாது, பொறாமைகொள்ளாது,

39. கர்வப் படாது, தீங்கு எண்ணாது,

தன் வழி சரியெனத் தர்க்கம் செய்யாது,

40. கோபப்படாது, பழிதீர்க்க எண்ணாது,

தன்னையே புகழாது, தீமை செய்யாது,

41. அதர்மம் செய்யாது, அகந்தை கொள்ளாது,

’தான்’ எனும் எண்ணம் தன்னில் கொள்ளாமல்,

42. சகலத்தையும் சகித்து சத்தியத்தில் மகிழும்,

அனவரையும் தாங்கி ஆழ்ந்து விசுவாசிக்கும்.

43. உண்மை மனதினில் ஊற்றுப்போல் பாயும்

உறுதியுடன் நம்பி வேர்கொண்டு நிலைக்கும்.

44. இந்த உயர் அன்பு உங்களில் பெருகிப்

பிறரை நேசிக்க ஆண்டவன் அருளட்டும்.

(பக்தர்கள் கூறினர்:)

45. இறைவன் மீது அன்பு உள்ளோர்க்கு

எல்லாம் நடக்கும் நன்மைக்கென்றே.

46. உண்மை அன்பில் அச்சமே இல்லை

பூரண அன்பு பயத்தை நீக்கும்.

47. பக்தியின் சேவையில் நித்தமும் வளர

ஐயனே, அன்பை எங்களில் பெருக்கு.

48. இறைவனின் அன்பை அறிந்த பின்னே

எதுபிரிக்கும் எமை உமைவிட்டு?

49. உயர்வும், தாழ்வும், ஆதிக்கவெறியும்,

துன்பம், பசியுடன் வேறெந்தத் துயரும்,

50. எதிர்காலம், நிகழ்காலம், வருங்காலமுடன்,

வானத்து வேறெந்த வல்லமைகளுடன்

51. நிந்தை, நாசம், வறுமை, அழிவு,

மற்றும் வேறெந்தச் சக்தியானாலும்

52. எள்ளளவேணும் பிரிக்காது எங்களை

என்றும் உந்தன் அன்பைவிட்டு.

53. எங்களைக் காக்கவே தன்னையளித்த

இறைவனே எம்முடன் என்றும் இருக்க

54. வெல்வது அன்றித் தோல்வியே அறியோம்

முற்றும் ஜெயம்கொண்ட முக்தேசனாலே.

(ஆண்டவன் கூறினான்:)

55. உங்கள் அன்பு உயர்வாய் இருக்கட்டும்

ஒவ்வொரு நாளும் பெருகி வளரட்டும்.

56. என்மூலம் அடைந்த இறையன்பு உங்கள்

பக்தியின் சேவையில் நிலைக்கட்டும் நித்தம்.

[அன்பு யோகம் என்ற ஆறாம் அதிகாரம்

இத்துடன் நிறைவுற்றது.]

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *